'இந்தி திவஸ்' விழாவை கண்டித்து ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்
|‘இந்தி திவஸ்' விழாவை கண்டித்து ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரு விதான சவுதாவில் போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு:
'இந்தி திவஸ்' விழாவை கண்டித்து ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரு விதான சவுதாவில் போராட்டம் நடத்தினர்.
சகிப்புத்தன்மை இல்லை
மத்திய அரசு சார்பில் இந்தி திவஸ் நிகழ்ச்சிக்கு நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதை கண்டித்து ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டசபை கட்சி தலைவர் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்திற்கு பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்திய அரசுக்கு மொழி சகிப்புத்தன்மை இல்லை. மாநிலங்கள் மீது குறிப்பாக கர்நாடகத்தின் மீது மத்திய அரசு அடிக்கடி இந்தி மொழியை திணித்து வருகிறது. கன்னடத்தை ஒடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நாட்டில் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் உள்ளனர். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் இந்தி மொழி திணிப்பு முயற்சியை அரசு கைவிடவில்லை.
நாட்டின் பலம்
வேற்றுமையில் ஒற்றுமை தான் நமது நாட்டின் பலம். அதை பாழாக்கினால் நாட்டை உடைப்பதற்கு சமம். சில உணர்வு பூர்வமான விஷயங்களை முன்வைத்து நாட்டை பிளவுபடுத்த பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. மாநில மொழிகளை நசுக்க முயற்சி செய்வதை நாங்கள் எதிர்க்கிறோம். 'இந்தி திவஸ்' பெயரில் கன்னடர்களின் வரிப்பணத்தை வீணாக்குவது சரியா?.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
இதில் ஜனதா தளம்(எஸ்) மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம், கட்சியின் கொறடா வெங்கடராவ் நாடகவுடா, கட்சியின் மாநில துணைத்தலைவர் டி.ஏ.ஷரவணா எம்.எல்.சி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.