போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கி இந்தி நடிகர் கைது
|பெங்களூருவில் நட்சத்திர ஓட்டலில் நடந்த மதுவிருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக இந்தி நடிகர் சித்தாந்த் கபூர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 4 பேர் சிக்கி உள்ளனர்.
பெங்களூரு
பெங்களூருவில் நட்சத்திர ஓட்டலில் நடந்த மதுவிருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக இந்தி நடிகர் சித்தாந்த் கபூர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 4 பேர் சிக்கி உள்ளனர்.
ஓட்டலில் விருந்து நிகழ்ச்சி
பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் போதைப்பொருட்களை பயன்படுத்துவோரை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகிறார்கள். மேலும் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பெங்களூரு அல்சூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எம்.ஜி.ரோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு மது விருந்து நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், அங்கு போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அல்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட போலீசார், நட்சத்திர ஓட்டலுக்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த ஓட்டலுக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 30-க்கும் மேற்பட்டோர் மதுஅருந்தி விட்டு, சினிமா பாடல்களுக்கு நடனமாடி கொண்டிருந்தனர். உடனே அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் ஓட்டலில் இருந்து 30-க்கும் மேற்பட்டோரை 3 வேன்களில் ஏற்றி போலீசார் அழைத்து சென்றனர்.
நடிகர் சித்தாந்த் கபூர் கைது
இந்த நிலையில், விருந்து நிகழ்ச்சி நடந்த ஓட்டல் அறையில் இருந்து கஞ்சா மற்றும் எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, மதுவிருந்தில் கலந்துகொண்டவர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்தி இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து, 30 பேருக்கும் நள்ளிரவில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் ரத்த மாதிரி பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் 5 பேர் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. உடனே அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களில் பிரபல இந்தி நடிகர் சித்தாந்த் கபூரும் ஒருவர் ஆவார். இவர், இந்தியில் பிரபல நடிகராக இருந்து வரும் சக்தி கபூரின் மகன் ஆவார். மேலும் பிரபல இந்தி நடிகை ஸ்ரத்தா கபூர், இவரது சகோதரி ஆவார். முதலில் உதவி இயக்குனராக இருந்த சித்தாந்த் கபூர், தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் பல்வேறு இந்தி படங்களில் நடித்து பிரபலமாகி இருந்தார்.
இந்த நிலையில் தான், சித்தாந்த் கபூர் பெங்களூருவில் தனது நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது.
விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு?
சித்தாந்த் கபூருடன் கைதானவர்களில் ஒருவர் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். மற்றொருவர் பெங்களூருவை சேர்ந்தவர் ஆவார். மேலும் 2 பேர் கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சிக்கு நடிகர் சித்தாந்த் கபூர் தான் ஏற்பாடு செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறாா்கள்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் நடிகர் சித்தாந்த் கபூரின் நண்பர்கள், தோழிகள் என 30 பேர், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து பங்கேற்றனர். அவர்கள் பெங்களூரு நட்சத்திர ஓட்டலில் 'ரேவ் பார்ட்டி' நடத்தியதுடன், போதைப்பொருட்களை பயன்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
7 போதை மாத்திரைகள் பறிமுதல்
ஓட்டலில் நடத்தப்பட்ட சோதனையில் 5 கிராம் கஞ்சா மற்றும் 7 எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் பீமாசங்கர் குலேத் தெரிவித்துள்ளார். மேலும் கைதான சித்தாந்த் கபூர் உள்பட 5 பேர் மீதும் அல்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றவர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்தாததால் அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
ஏற்கனவே பெங்களூருவில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பிரபல கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். தற்போது பெங்களூருவில் விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக இந்தி நடிகர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.