அதானி பங்குகளில் ஷாட் செல்லிங்.. பெரும் லாபமடைந்த 12 நிறுவனங்கள்: அமலாக்கத்துறை தகவல்
|ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியாவதற்கு முன்பாகவே அதானி குழும பங்குகள் மீது ஷாட் செய்துள்ளனர் என அமலாக்க துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் சரிவடைந்தன. அந்த சமயத்தில் அதானி பங்குகள் மீது ஷாட்டிங் செய்து பலர் அதிகப்படியான லாபத்தை பெற்றனர்.
இதுகுறித்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. முதற்கட்ட விசாரணையை நிறைவு செய்த அமலாக்கத்துறை, செபியிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், அதானி பங்குகள் மீது ஷாட்டிங் செய்து 12க்கும் அதிகமான வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் அதிகப்படியான லாபத்தை அடைந்துள்ளனர் எனவும், இவர்கள் அனைவரும் குறைந்த வரிவிகிதம் கொண்ட நாடுகளில் இருப்பவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.
ஒரு நிறுவனத்தின் பங்கு விலை குறையும் என்று பந்தயம் கட்டி அதன் மூலம் லாபம் பெறுவதே ஷாட் செல்லிங் எனப்படுகிறது.
சில ஷாட் செல்லர்கள் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியான ஜனவரி 24 ஆம் தேதிக்கு 2-3 நாட்கள் முன்பாகவே அதானி குழும பங்குகள் மீது ஷாட் செய்துள்ளனர் எனவும் அமலாக்க துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செபியிடம் பதிவு செய்யப்பட்ட உள்நாட்டு முதலீட்டாளர்கள், வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை பாதுகாப்பதற்கும், சந்தை அபாயங்களை குறைக்கவும் ஷாட் நிலைப்பாடு எடுக்க அனுமதிக்கிறது.