9-ம் வகுப்பு மாணவிக்கு வலுக்கட்டாயமாக ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு
|இமாச்சலப் பிரதேசத்தில் வலுக்கட்டாயமாக ஆபாச வீடியோவைக் காட்டி, மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிம்லா,
இமாச்சலப் பிரதேசத்தில் 9-ம் வகுப்பு மாணவிக்கு வலுக்கட்டாயமாக ஆபாச வீடியோவைக் காட்டி, மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தலைநகர் சிம்லாவில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ஜுங்காவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர் ஒருவர் மீது அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியின் தாயார் நேற்று தல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் நேற்று முன்தினம் கூடுதல் வகுப்புக்கு இருக்குமாறு மாணவியிடம் கூறியுள்ளார். அப்போது மாணவியிடம் ஒரு பெண்ணின் நிர்வாண வீடியோவை வலுக்கட்டாயமாக காட்டி, மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் மாணவியை தகாத முறையில் தொட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 354 மற்றும் 354A மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் 10 மற்றும் 12 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாஜிஸ்திரேட் முன்னிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.