< Back
தேசிய செய்திகள்
இமாச்சல பிரதேசம்: மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் விக்ரமாதித்ய சிங்
தேசிய செய்திகள்

இமாச்சல பிரதேசம்: மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் விக்ரமாதித்ய சிங்

தினத்தந்தி
|
28 Feb 2024 12:21 PM IST

இமாச்சல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.

சிம்லா,

இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும், 25 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட பா.ஜ.க.வுக்கு 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறியும், 3 சுயேச்சைகள் வாக்களித்ததாலும் பா.ஜ.க. வேட்பாளர் ஹர்ஷ் மஹாஜன் வெற்றி பெற்றார்.

இது காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பா.ஜ.க. தலைவர் ஜெய்ராம் தாகூர் தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை கவர்னரை சந்தித்தனர். அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சட்டமன்ற சபாநாயகர் கவர்னரை சந்தித்து பேசினார். இந்த நிலையில் இமாச்சல பிரதேச மந்திரி விக்ரமாதித்யா சிங் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் காங்கிரஸ் தலைவர் வீரபத்ர சிங்கின் மகன் ஆவார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த விக்ரமாதித்ய சிங் பேசியதாவது,

"தற்போதைய அரசியல் சூழலில் அரசின் அங்கமாக நான் நீடிப்பது சரியல்ல, அதனால் மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது ஆதரவாளர்கள், நலம் விரும்பிகள் ஆகியோருடன் உரிய விவாதங்கள் மற்றும் ஆலோசனை நடத்திய பிறகு எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வேன்.

கள நிலவரம் குறித்து கட்சியின் மேலிடத்துக்கு எடுத்துரைத்துள்ளேன். கட்சியின் மேலிடம்தான் முடிவெடுக்க வேண்டும். எந்த முடிவு எடுக்கப்பட்டாலும், கட்சி மற்றும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படும்." என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்