இமாசல பிரதேசம்: கடும் பனிப்பொழிவால் மூடப்பட்ட 566 சாலைகள்; மின் விநியோகம் பாதிப்பு
|புது பனிப்பொழிவால், நீண்டகால வறட்சியானது மறைந்து, விவசாயிகள் பலனடைவார்கள் என்று கூறியுள்ளார்.
சிம்லா,
இமாசல பிரதேசத்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், 6 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட பல்வேறு பகுதிகளிலும் 566-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டு உள்ளன. 700 மின் விநியோக திட்டங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன.
கின்னார், குல்லு, லஹால்-ஸ்பிட்டி, சம்பா மற்றும் சிம்லா மாவட்டங்களில் புதிதாக பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. சிர்மார், கங்ரா மற்றும் மாண்டி மாவட்டங்களில் புதிதாக பனிப்படலம் ஏற்பட்டு உள்ளது.
இதுபற்றி இமாசல பிரதேச பொதுப்பணி துறை மந்திரி விக்ரமாதித்ய சிங் கூறும்போது, 138 சாலைகளில் உள்ள பனியை நீக்கும் பணிகள் இன்று பிற்பகுதிக்குள் மேற்கொள்ளப்படும். இதற்காக 206 இயந்திரங்கள் மற்றும் குழுவினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சமீபத்திய பனிப்பொழிவால், ரூ.450 கோடி அளவுக்கு நிதி இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார். எனினும் இந்த புது பனிப்பொழிவால், நீண்டகால வறட்சியானது மறைந்து, விவசாயிகள் பலனடைவார்கள். போக்குவரத்துக்காகவும் சாலை திறப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.