இமாசல பிரதேசம்: பருவகால பேரிடரால் 400 பேர் உயிரிழப்பு; அரசு அறிவிப்பு
|இமாசல பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பருவகால பேரிடரால் 400 பேர் உயிரிழந்து உள்ளனர் என அரசு நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
சிம்லா,
இமாசல பிரதேசத்தில் பருவகாலத்தில் பெய்த கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்டவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதில் சிக்கி பலர் உயிரிழந்தனர். பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, காணாமல் போனார்கள். வீடுகள், கட்டிடங்கள் நீரில் மூழ்கின. மின் விநியோகம் பாதிப்படைந்தது.
இதேபோன்று, மரங்கள், மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன. சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டது. கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
இதுபற்றி மாநில வருவாய் துறை மந்திரி ஜெகத் சிங் நேகி கூறும்போது, கடந்த ஜூன் 24-ந்தேதி தொடங்கிய பருவமழையால் மாநிலத்தில் பலத்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதனுடன் தொடர்புடைய வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடரால் 400 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.
இதுதவிர, 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். 2,500 வீடுகள் முற்றிலும் சேதமடைந்து உள்ளன. 11 ஆயிரம் வீடுகள் பகுதியளவு சேதமடைந்து உள்ளன என கூறியுள்ளார்.
இதில், நிறைய பேர் நிலம் இழந்துள்ளனர். பல இடங்களில் வன உரிமைகள் சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால், நாங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர கோரிக்கை விட இருக்கிறோம். இதுபற்றி மத்திய அரசிடம் நாங்கள் பேச உள்ளோம் என நேகி கூறியுள்ளார்.