இமாசல பிரதேசம்: வெள்ளத்தில் சிக்கி தவித்த 300 இஸ்ரேலிய சுற்றுலாவாசிகள் மீட்பு
|வெள்ளம் பாதித்த இமாசல பிரதேசத்தில் சிக்கி தவித்த இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 300 சுற்றுலாவாசிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி,
இமாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளன. 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் புலம்பெயர்ந்து பாதுகாப்பான பகுதிக்கு சென்று உள்ளனர்.
எனினும், பலர் வெள்ள பாதிப்பில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. அவர்களில் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலாவாசிகளும் அடங்குவார்கள்.
இதுபற்றி இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நாவர் கிலான் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், மீட்பு குழுவினர் தூதரக பணியாளர்களுடன் இணைந்து, வெள்ளம் பாதித்த பகுதியில் சிக்கி தவித்த இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 300 சுற்றுலாவாசிகளை பாதுகாப்பாக மீட்டு உள்ளனர்.
அதிர்ஷ்டவசத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த பேரிடரில் சிக்கி பாதிக்கப்பட்டோருடன் எங்களது நினைவுகள் உள்ளன என தெரிவித்து உள்ளார்.
கடந்த 10-ந்தேதி, தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் இந்தோ-திபெத் எல்லை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை இணைந்து நடத்திய மீட்பு பணியில், குல்லு மாவட்டத்தில் கசோல் கிராமத்தில் சிக்கி தவித்த இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 125 சுற்றுலாவாசிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர்.
இதேபோன்று கசோல் பகுதியில் 40 வெளிநாட்டினர் உள்பட 2 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 14 ரஷியர்கள் உள்ளனர். ஆஸ்திரேலியர்கள், ரஷியர்கள், ரோமானியர்கள், ஜெர்மனி நாட்டவர்கள், அமெரிக்கர், அயர்லாந்து நாட்டு பெண்கள் உள்ளிட்டோர் சந்திராதல் பகுதியில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர்.