இமாச்சலபிரதேச தேர்தல்: முதல் மூன்று மணி நேரத்தில் 18 சதவீத வாக்குகள் பதிவு
|முதல் மந்திரி ஜெய் ராம் தாக்கூர், தனது மனைவி மற்றும் மகள்களுடன் மண்டி மாவட்டத்தில் உள்ள செராஜில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
சிம்லா,
இமாசலபிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 68 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு 55 லட்சத்து 92 ஆயிரத்து 828 வாக்காளர்கள் உள்ளனர்
இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. சார்பில் 20 அதிருப்தியாளர்கள் தேர்தலில் போட்டியில் உள்ளனர். இதே போன்று காங்கிரஸ் கட்சியிலும் 12 அதிருப்தி வேட்பாளர்கள் களம் காணுகின்றனர். எனவே இரு கட்சிகளுக்கும் அதிருப்தியாளர்கள் பெரும் தலைவலியாக மாறி உள்ளனர். நேற்றுமுன்தினம் மாலை அங்கு பிரசாரம் ஓய்ந்தது.
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைகிறது. வாக்குப்பதிவுக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய வேட்பாளர்களாக முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் (செராஜ்), மாநில காங்கிரஸ் தலைவர் அக்னிஹோத்ரி (ஹரோலி), முன்னாள் முதல்-மந்திரி வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங் (சிம்லா ஊரகம்) உள்ளனர். மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது வாக்கினை அளித்து வருகின்றனர்.
முதல் மந்திரி ஜெய் ராம் தாக்கூர், அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மண்டி மாவட்டத்தில் உள்ள செராஜில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தனர். அதேபோல மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஹமிர்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் காலை 11 மணி நிலவரப்படி 18 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) பதிவாகிற வாக்குகள், அடுத்த மாதம் 8-ந் தேதி குஜராத் சட்டசபை தேர்தல் வாக்குகளுடன் எண்ணப்படும். அன்று பிற்பகலில் இமாசலபிரதேசத்தை மீண்டும் பா.ஜ.க. ஆளுமா அல்லது அந்தக் கட்சியிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றுமா என தெரிய வந்து விடும்.