ஹிஜாப் அணிந்தபடி நண்பருடன் வலம் வந்த பெண்
|சிவமொக்காவில் ஹிஜாப் அணிந்தபடி ஆண் நண்பருடன் ஒரு பெண் சுற்றித்திரிந்தார். அந்த பெண்ணையும், அவருடன் இருந்த நபரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
சிவமொக்கா:
சிவமொக்காவில் ஹிஜாப் அணிந்தபடி ஆண் நண்பருடன் ஒரு பெண் சுற்றித்திரிந்தார். அந்த பெண்ணையும், அவருடன் இருந்த நபரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
என்.ஐ.ஏ. விசாரணை
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை அடுத்த நாகுரி பகுதியில் குக்கர் குண்டு வெடித்து சிதறியது. இதில் பயங்கரவாதியான முகமது ஷாரிக் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் முகமது ஷாரிக் கைது செய்யப்பட்டார். அவரிடம் என்.ஐ.ஏ.(தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஷாரிக் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா சொப்புகுட்டே கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதனால் சிவமொக்கா போலீசார் உஷாராகியுள்ளனர். மேலும் கண்காணிப்பு பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கைது
இந்நிலையில் நேற்று சிவமொக்கா நகரில் உள்ள இலியாஷ் நகர் பகுதியில் ஹிஜாப் அணிந்தபடி ஒரு பெண், ஆண் ஒருவருடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்தார். இவர்கள் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று, வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்டுள்ளனர். அப்போது அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் உடனே இது குறித்து சிவமொக்கா டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் 2 பேரும் காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. வீடு, வீடாக சென்று பணம் மற்றும் பொருள் உதவி கேட்டுள்ளனர். மேலும் இருவரும் தங்குவதற்கு வீடு கிடைக்குமா என்று கேட்டதாக தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்தில் அழைத்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் வைத்து 2 பேரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.