< Back
தேசிய செய்திகள்
ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கண்டித்து போராட்டம்; மங்களூரு பல்கலைக்கழகத்தில் பரபரப்பு
தேசிய செய்திகள்

ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கண்டித்து போராட்டம்; மங்களூரு பல்கலைக்கழகத்தில் பரபரப்பு

தினத்தந்தி
|
27 May 2022 2:49 AM IST

மங்களூரு பல்கலைக்கழகத்தில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கண்டித்து மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மங்களூரு

மங்களூரு பல்கலைக்கழகத்தில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கண்டித்து மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹிஜாப் விவகாரம்

கர்நாடகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 'ஹிஜாப்' பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. அதாவது, கடலோர மாவட்டமான உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் எதிரொலித்தது. இதனால் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது.

இதன்காரணமாக வன்முறையும் ஏற்பட்டது. இந்த நிலையில், மாநில அரசு மத அடையாள ஆடைகளை அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வர தடை விதித்தது. இதனை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் சிலர், கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான நீதிபதிகள், பள்ளி, கல்லூரிகளில் மத அடையாள ஆடை அணிந்து வர தடை விதித்து மாநில அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டது.

தேர்வுகள் புறக்கணிப்பு

கர்நாடக ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பால் முஸ்லிம் மாணவிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் கடும் அதிருப்தி அடைந்தனர். ஐகோர்ட்டு மற்றும் மாநில அரசின் உத்தரவை கண்டித்து முஸ்லிம் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் புறக்கணித்தனர். மேலும் எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி. தேர்வுகளிலும் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது.

இதனால் பல மாணவிகள், தங்களுக்கு கல்வியை விட ஹிஜாப் தான் முக்கியம் என தேர்வுகளை புறக்கணித்தனர். இந்த நிலையில் பள்ளி, கல்லூரிக்கு வரும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரலாம் என்றும், வகுப்பறைக்கு வரும்போது ஹிஜாப்பை கழற்றி வைத்து விட்டு வர வேண்டும் என்றும், அதற்காக தனி அறையை ஒதுக்கியும் பள்ளி, கல்லூரிகள் ஏற்பாடுகள் செய்தன. அதன்பிறகு ஹிஜாப் விவகாரம் பெரிய அளவில் பேசப்படவில்லை.

மீண்டும் தலை தூக்குகிறது

இந்த நிலையில் கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் மீண்டும் தலைத்தூக்க தொடங்கி உள்ளது. கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் மீண்டும் ஹிஜாப் பிரச்சினை தொடங்கி உள்ளது. மங்களூரு ஹம்பன்கட்டாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கும் முஸ்லிம் மாணவிகள், ஹிஜாப் அணிந்து பல்கலைக்கழகத்துக்கு வந்தனர்.

இந்த நிலையில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு ஒரு தரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஒரு தரப்பு மாணவர்கள் முறையிட்டுள்ளனர்.

போராட்டம்

இந்த நிலையில் ஹிஜாப் அணிவது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாக குழு ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பல்கலைக்கழகத்துக்கு வர வேண்டாம் என்றும், ஐகோர்ட்டு மற்றும் மாநில அரசு உத்தரவுப்படி சீருடை அணிந்து வர வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனாலும் நேற்று முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பல்கலைக்கழகத்துக்கு வந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) மாணவ அமைப்பை சேர்ந்த மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு பல்கலைக்கழகம் முன்பு திடீரென்று தா்ணா போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்கப்பட்டால், நாங்கள் காவி துண்டு அணிந்து வருவோம் என்று தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது மாணவ அமைப்பினர், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்றும், அவ்வாறு வந்தால் நாங்களும் காவி துண்டு அணிந்து வருவோம் என்றும் தெரிவித்தனர்.

அப்போது ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாள ஆடைகள் அணிந்து பல்கலைக்கழகத்துக்கு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பல்கலைக்கழக நிர்வாகிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவ அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அவர்கள் அங்கிருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டர் ராஜேந்திராவை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்தனர். ஆனால் கலெக்டர் இல்லாததால் அவர்கள் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்