ஹிஜாப் எங்கள் உரிமை: நீதிக்காக நாங்கள் இறுதிவரை போராடுவோம்; முஸ்லிம் மாணவிகள் ஆவேச பேட்டி
|ஹிஜாப் எங்கள் உரிமை, நாங்கள் நீதிக்காக இறுதிவரை போராடுவோம் என முஸ்லிம் மாணவிகள் ஆவேசமாக கூறினர்.
மங்களூரு;
ஹிஜாப் விவகாரம்
உடுப்பி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜர் அணிய கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. மேலும், ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த மாணவிகளை நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தினர். இதனால் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்குள் அனுமதிக்க கோரி கல்லூரி முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக காவி துண்டு அணிந்து இந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தின்போது பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் கர்நாடகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து முஸ்லிம் மாணவிகள் தங்களை ஹிஜாப்புடன் வகுப்பிற்குள் அனுமதிக்க கோரி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, ஹிஜாப் குறித்து கர்நாடக அரசு அறிவித்தது செல்லும் என கூறி தீர்ப்பு வழங்கினார். மேலும், ஹிஜாப் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மாணவிகள் பேட்டி
இந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஹம்பன்கட்டே கல்லூரிக்கு முஸ்லிம் மாணவிகள் 12 பேர் ஹிஜாப் அணிந்து வந்தனர். அவர்களை கல்லூரி நிர்வாகம் தடுத்து நிறுத்தியது. மேலும், ஹிஜாப் குறித்த ஐகோர்ட்டு தீர்ப்பை குறிப்பிட்டு ஹிஜாப்பை கழற்றுமாறு கேட்டது. ஆனால் மாணவிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து வகுப்பை புறக்கணித்து வீட்டிற்கு சென்றனர். இந்த சம்பவம் கடந்த வாரத்தில் தொடர்கதையாக நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு ஹிஜாப்புடன் வந்த மாணவிகளை தடுத்து நிறுத்தியதோடு, அதில் 6 மாணவிகளை இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஹிஜாப் குறித்து முஸ்லிம் மாணவிகள் நேற்று மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
நாங்கள் இதுநாள் வரை நாங்கள் ஹிஜாப் அணிந்து தான் பள்ளி, கல்லூரிகளுக்கு வந்தோம். இப்போது புதிதாக ஹிஜாப் அணிய தடை விதித்தால் ஏற்று கொள்ளமுடியாது. நாங்கள் எங்கள் கல்லூரி முதல்வரிடம் ஹிஜாப் அணிந்து வர அனுமதி கேட்டோம்.
நம்பிக்கையை இழக்க மாட்டோம்
ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டார். உடனே நாங்கள் இதுகுறித்து மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். அவரும் எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. நேற்று முன்தினம் கல்லூரி முதல்வர் வாட்ஸ்-அப் மூலம் ஒரு குறுந்தகவல் அனுப்பி இருந்தார். அதில் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர அனுமதி கிடையாது. அதனால் நீங்கள் இனி கல்லூரிக்கு வர தேவையில்லை என கூறியிருந்தார்.
அப்போது கல்லூரி முதல்வரை தொடர்பு கொண்டு ஹிஜாப்புடன் எங்களை அனுமதிக்க கேட்டோம்.. ஆனால் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. இதனால் நாங்கள் தனித்துவிடப்பட்டோம்.ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை. நாங்கள் நீதிக்காக நம்பிக்கையை இழக்காமல் இறுதிவரை போராடுவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.