< Back
தேசிய செய்திகள்
நெடுஞ்சாலை திட்டங்களால் ஏரிகளை உருவாக்க முடியும் - மத்திய மந்திரி நிதின் கட்காரி
தேசிய செய்திகள்

நெடுஞ்சாலை திட்டங்களால் ஏரிகளை உருவாக்க முடியும் - மத்திய மந்திரி நிதின் கட்காரி

தினத்தந்தி
|
8 Sept 2022 9:02 PM IST

நெடுஞ்சாலை திட்டங்களால் ஏரிகளை உருவாக்க முடியும் என்று நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி தலைமையில் இன்று அனைத்து மாநில நெடுஞ்சாலைத்துறை மந்திரிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

மத்திய அரசு அம்ருத் சரோவர் திட்டத்தை கொண்டு வந்துள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதில் சாலைகள் போக்குவரத்து துறை முக்கிய பங்காற்ற முடியும். மிஷன் அம்ருத் சரோவர் சட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி தொடங்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்தில் 75 நீா்நிலைகள் மேம்படுத்தப்படுகிறது.

நான் மராட்டிய மாநிலத்தில் விதர்பா மண்டலத்தை சேர்ந்தவன். அங்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். விவசாயகளின் பிரச்சினைகளில் முக்கியமானது நீர் பற்றாக்குறை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. ஆனால் இருக்கும் நீரை சரியான முறையில் பயன்படுத்த நீர் நிர்வாகம் தேவைப்படுகிறது.

நமது தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தி ஏரிகளை உருவாக்க முடியும். நெடுஞ்சாலைகள் அமைக்க மண் தேவைப்படுகிறது. அந்த மண் ஒரு இடத்தில் இருந்து எடுத்தால் ஏற்படும் அகண்ட பள்ளத்தை பயன்படுத்தி புதிய நீர்நிலைகளை உருவாக்க முடியும். இந்த திட்டத்தால் நெடுஞ்சாலைகள் மட்டுமே அமைக்காமல் கிராமங்களில் ஏரிகளும் உருவாக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்.

இந்திய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்தி நெடுஞ்சாலை திட்டத்தில் 36 ஏரிகள் மற்றும் 22 கிணறுகள் கிடைத்தன. இதுபோன்று புதுமையான முறையில் திட்டங்களை செயல்படுத்துவதால் திட்ட செலவு குறைவதுடன் மற்றவர்களுக்கும் உதவி கிடைக்கும். அதனால் மாநில மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள், திட்ட செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்