பிரதமர் மோடி பாலியல் பலாத்கார குற்றவாளிகளுடன் துணை நிற்கிறார் - ராகுல் காந்தி கடும் விமர்சனம்!
|பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரும் நன்னடத்தையின் அடிப்படையில், மத்திய அரசின் ஒப்புதலுடன் விடுவிக்கப்பட்டனர் என சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் அரசு நேற்று பதில்மனு தாக்கல் செய்துள்ளது.
பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை கருணை அடிப்படையில் விடுவித்த குஜராத் அரசின் முடிவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சுபாஷினி அலி உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், குஜராத் அரசின் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் 2002ஆம் அண்டு நடைபெற்ற குஜராத் கலவர வழக்கில், கைதான 11 பேரை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக குஜராத் அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் நேரடியாகத் தாக்கியுள்ளார். பிரதமர் மோடி பாலியல் குற்றவாளிகளுடன் துணை நிற்கிறார் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறியிருப்பதாவது, "பெண்களுக்கு மரியாதை அளிப்பதாக செங்கோட்டையில் இருந்து பேசுகிறார்கள்; ஆனால் உண்மையில், பாலியல் குற்றவாளிகளுடன் துணை நிற்கிறார்கள்.
பிரதமரின் வாக்குறுதிக்கும் நோக்கத்திற்கும் உள்ள வேறுபாடு தெளிவாக தெரிகிறது. பிரதமர் பெண்களை ஏமாற்றத்தை மட்டுமே அளித்துள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஆனால் அதே நாளில் தான் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரும் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.