< Back
தேசிய செய்திகள்
கேரளாவில் மருத்துவ மாணவி தற்கொலை விவகாரத்தில் நண்பர் மீது வழக்கு பதிவு
தேசிய செய்திகள்

கேரளாவில் மருத்துவ மாணவி தற்கொலை விவகாரத்தில் நண்பர் மீது வழக்கு பதிவு

தினத்தந்தி
|
7 Dec 2023 3:38 PM IST

உண்மையான அன்பிற்கு இவ்வுலகில் மதிப்பு இல்லை. எல்லோருக்கும் பணம் தான் முக்கியமாக இருக்கிறது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்ஞாரமூடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் அசீஸ். இவருடைய மகள் சஹானா (வயது 26). எம்.பி.பி.எஸ். முடித்த அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் முதுகலை படிப்பு படித்து வந்தார்.

இதற்காக மருத்துவ கல்லூரி அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சக மாணவிகளுடன் தங்கியிருந்தார். இதற்கிடையே சஹானாவின் தந்தை அப்துல் அசீஸ் இறந்து விட்டார். இதனால் சஹானா மிகவும் மனமுடைந்தார்.

பின்னர் சஹானாவுக்கு அவருடைய தாய் மட்டும் உறுதுணையாகவும், ஆறுதலாகவும் இருந்து வந்தார். இந்த சூழ்நிலையில் மகளுக்கு திருமணம் செய்து வைக்க அவருடைய தாய் முடிவெடுத்தார். இதற்காக மாப்பிள்ளை தேடியபோது வரதட்சணையாக கூடுதல் பணம் கேட்டதால் சஹானாவுக்கு திருமணத்திற்கான நேரம் கைகூடவில்லை. தொடர்ந்து திருமண வரன் தள்ளிக்கொண்டே சென்றது.

இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி இரவு அறையில் சஹானா மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

பிரேத பரிசோதனையில் ஷஹானா உடலில் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது செலுத்தப்படும் மயக்க மருந்து இருந்தது. இதனால் அவர் மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையே சஹானா தங்கியிருந்த அறையில், அவர் சாவதற்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

அந்த கடிதத்தில், "என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது தந்தை இப்போது இல்லை. கட்டுக்கட்டாக பணம் கொடுக்க என்னிடம் வசதி இல்லை.உண்மையான அன்பிற்கு இவ்வுலகில் மதிப்பு இல்லை. எல்லோருக்கும் பணம் தான் முக்கியமாக இருக்கிறது" என எழுதப்பட்டிருந்தது.

அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் சஹானா குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.

சஹானா எதிர்பார்த்த திருமண வரன் வந்தாலும் மாப்பிள்ளை வீட்டார் கூடுதலாக வரதட்சணை கேட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவத்தால் அவருக்கு திருமணம் தடைபட்டு வந்துள்ளது. இறுதியாக சஹானாவுக்கு நன்கு தெரிந்த டாக்டர் ஒருவருடன் திருமண ஏற்பாடு நடந்த போதும், கூடுதல் வரதட்சணை பிரச்சினையால் அதுவும் பாதியிலேயே நின்றுள்ளது. அதாவது வரதட்சணையாக 15 ஏக்கர் நிலம், 100 பவுன் நகை, ஒரு கார் கேட்டுள்ளனர்.

இந்தநிலையில் தான் சஹானா மனமுடைந்து தற்கொலை எனும் விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

பெண் டாக்டர் தற்கொலை விவகாரம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்க எடுக்க மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து ஷஹானாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயம் செய்து விட்டு ஏமாற்றிய அவரது நண்பரான டாக்டர் ரூவைஸ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அவர் மீது தற்கொலைக்கு தூண்டியது. வரதட்சணை தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. மேலும் கருநாகப்பள்ளியில் உள்ள தனது வீட்டில் இருந்த டாக்டர் ரூவைசை போலீசார் பிடித்தனர். அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் டாக்டர் ரூவைஸ் கைது செய்யப்படுவாரா என்பது தெரியவரும்.

டாக்டர் ரூவைஸ் கேரள மருத்துவ முதுநிலை பட்டதாரிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராக உள்ளார். அந்த பொறுப்பில் இருந்து டாக்டர் ரூவைஸ் நீக்கப்பட்டுள்ளார். விசாரணையில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் அவர் நீக்கப்பட்டுள்ளதாக மருத்துவ முதுநிலை பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்