< Back
தேசிய செய்திகள்
ஜார்க்கண்டில் கைது செய்யப்படும் 3-வது முதல்-மந்திரி ஹேமந்த் சோரன்
தேசிய செய்திகள்

ஜார்க்கண்டில் கைது செய்யப்படும் 3-வது முதல்-மந்திரி ஹேமந்த் சோரன்

தினத்தந்தி
|
1 Feb 2024 5:46 AM IST

பா.ஜ.க.வை சேர்ந்த ரகுபர் தாஸ் மட்டுமே பதவி காலம் முழுவதும் முதல்-மந்திரியாக (2014 முதல் 2019) நீடித்திருக்கிறார்.

ராஞ்சி,

ஜார்க்கண்டில் ரூ.600 கோடி நிலமோசடி தொடர்பான வழக்கில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 20-ந்தேதி ஹேமந்த் சோரனின் இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஜனவரி 27-ந்தேதி முதல் 31-ந்தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் ஹேமந்த் சோரன் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. எனினும், இக்கடிதத்துக்கு சோரன் தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வ பதிலும் அனுப்பப்படவில்லை.

இதன்பின்னர், டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமலாக்கத்துறையினர் கடந்த 29-ந்தேதி மீண்டும் சோதனை செய்தனர். வீட்டில் ஹேமந்த் சோரன் இல்லை. எனினும், இந்த சோதனையில், அவரின் வீட்டில் இருந்து ரூ.36 லட்சம், அவரின் 2 பி.எம்.டபிள்யூ. காரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனிடம் நிலமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்க துறை நேற்று (புதன் கிழமை) விசாரணை நடத்தியது. சோரனிடம் கேள்விகளை கேட்டு பதில்களை பெற்ற பின்னர், அவர் கைது செய்யப்பட்டார்.

ஹேமந்த் சோரனுக்கு முன்பு அவருடைய தந்தை சிபு சோரன் மற்றும் மது கோடா ஆகியோர் முதல்-மந்திரிகளாக இருந்தபோது கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களை தொடர்ந்து, ஜார்க்கண்டில் கைது செய்யப்படும் 3-வது முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் ஆவார்.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 29-ந்தேதி முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் பொறுப்பேற்றார். அவரிடம் அமலாக்க துறை நேற்று 6 மணிநேரம் விசாரணை நடத்தியது. இதற்கு முன்பு அவர் 9 சம்மன்கள் அனுப்பியபோதும் அதனை அவர் தவிர்த்து விட்டார்.

ஜார்க்கண்டில் இதுவரை 6 முதல்-மந்திரிகள் ஆட்சி செய்துள்ளனர். 3 முறை ஜனாதிபதி ஆட்சியும் நடந்துள்ளது. இதில், பா.ஜ.க.வை சேர்ந்த ரகுபர் தாஸ் மட்டுமே பதவி காலம் முழுவதும் முதல்-மந்திரியாக (2014 முதல் 2019) நீடித்திருக்கிறார்.

மேலும் செய்திகள்