பாலியல் புகார்: மலையாள திரைப்பட இயக்குநர் வி.கே. பிரகாஷுக்கு ஜாமீன்
|மலையாளத் திரைப்பட இயக்குநர் வி.கே. பிரகாஷ் இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
திருவனந்தபுரம்,
மலையாள சினிமாவில் நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் அத்து மீறல்கள் தொடர்பாக விசாரித்த ஹேமா கமிட்டி அறிக்கையில் சில பகுதிகளை கேரள அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதையடுத்து ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் வெளியிட அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி கேரள ஐகோர்ட்டில் ஒரு பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட்டு முழு அறிக்கையை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி ஐகோர்ட்டில் ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது இந்த அறிக்கையை உடனடியாக போலீஸ் சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அந்த அறிக்கையில் போக்சோ உள்பட பல கிரிமினல் வழக்குகள் தொடர்பான தகவல்கள் இடம் பெற்று உள்ளதால், புகார் கொடுத்தவர்கள் விரும்பினால் வழக்கு உள்பட சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையை சிறப்பு விசாரணைக் குழுவிடம் கேரள அரசு ஒப்படைத்தது. இதனிடையே மலையாள நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நடிகர் சித்திக் ராஜினாமா செய்தார். அதேபோல், கேரள கலாசித்ரா அகாடமியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் இயக்குநர் ரஞ்சித் விலகினார். இதற்கிடையே, நடிகைகள் ஒவ்வொருவராக, நடிகர்கள் தங்களுக்கு தந்த பாலியல் தொல்லைகளை அம்பலப்படுத்தி வந்தனர். குறிப்பாக, மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியம்பிள்ளை ராஜூ, நடிகர் இடவேள பாபு ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைக்கப்பட்டிருந்தது.
இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து மலையாள நடிகர்கள் சங்க (அம்மா) தலைவர் மோகன்லால் உள்பட அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதன் பின்னர் விசாரணைக் குழுவில் நடிகைகள் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித், நடிகர் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சூழலில் திரைப்பட இயக்குநர் வி.கே.பிரகாஷ் மீது பெண் எழுத்தாளர் பாலியல் புகார் அளித்தார். ஏப்ரல் 2022ம் ஆண்டு தான் எழுதிவைத்திருந்த கதையை வி.கே. பிரகாஷிடம் கூறச் சென்றபோது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் எழுத்தாளர் புகாரில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, பள்ளித்தோட்டம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் இயக்குநர் வி.கே.பிரகாஷ் முன்ஜாமீன் பெற்றிருந்தார்.
இருப்பினும், காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மூன்று நாள்களுக்கு விசாரணை நடத்திய பிறகு அவரை விடுதலை செய்யலாம் என கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பள்ளித்தோட்டம் காவல் துறையினர் அவரை கைது செய்து மூன்று நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், மூன்று நாள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி வி.கே.பிரகாஷ் இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.