புனே: மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் - 4 பேர் உயிர் தப்பினர்
|மும்பையில் இருந்து ஐதராபாத் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானது.
புனே,
குளோபல் வெக்ட்ரா என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று மும்பையில் இருந்து ஐதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் மராட்டிய மாநிலம் புனேவின் பாட் கிராமம் அருகே சென்றபோது பலத்த காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக விழுந்து நொறுங்கியது.
ஹெலிகாப்டரில் கேப்டன் உட்பட மொத்தம் நான்கு பேர் பயணித்தனர். அதிர்ஷ்டவசமாக நான்கு பேரும் உயிர் தப்பினர். இந்த விபத்தில் கேப்டன் ஆனந்த் படுகாயம் அடைந்தார். அவர் சதார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற மூன்று பேரின் உடல் நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று மேற்கு மராட்டியத்தின் புனே மற்றும் சதாரா மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கிழக்கு மத்திய அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் மராட்டியத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.