டெல்லி, உத்தரபிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு : வாகன விபத்துகளில் 5 பேர் பலி
|டெல்லி, உத்தரபிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட வாகன விபத்துகளில் சிக்கி 5 பேர் பலியாகினர்.
புதுடெல்லி,
டெல்லி, உத்தரபிரதேசத்தில் காலை வேளைகளில் கடும் பனிப்பொழிவு நிலவிவருகிறது. இதனால் ஏற்பட்ட வெவ்வேறு வாகன விபத்துகளில் 5 பேர் பலியாகி இருக்கின்றனர். 33 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கடும் பனிப்பொழிவு
டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் சமீப சில நாட்களாக காலை வேளையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
பனித்திரை வாகன ஓட்டிகளின் பார்வையை மறைப்பதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படும் நிலையில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்படியும் விபத்துகள் நேரிட்டு வருகின்றன.
3 பேர் பலி
உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு நேற்று காலை ஒரு பஸ் சென்றது. லக்னோ-ஆக்ரா விரைவுச்சாலையில் அந்த பஸ் சென்றபோது ஒரு லாரி மீது பின்புறமாக மோதியது. அந்த பஸ் மீது மற்றொரு கார் மோதியது.
இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். மேலும் 9 பேர் காயம் அடைந்தனர். அப்போது மேலும் ஒரு பஸ்சும், காரும் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளாயின. ஆனால் அதில் யாரும் காயம் அடையவில்லை.
10 வாகனங்கள் மோதல்
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் தேசிய நெடுஞ்சாலை 91-ல் சென்ற வாகனங்கள் கடும் பனிப்பொழிவால் வரிசையாக மோதிக்கொண்டன. சுமார் 5 கி.மீ. தூரத்தில் 10-க்கு மேற்பட்ட வாகனங்கள் இவ்வாறு மோதிக்கொண்டதில் 2 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமுற்றனர்.
விபத்தில் சிக்கியவர்களையும், வாகனங்களையும் உள்ளூர் மக்களின் உதவியுடன் போலீசார் மீட்டனர். காயம் அடைந்தவர்களை ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைத்தனர்.