< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் கடும் பனி: 40 உள்நாட்டு விமானங்கள் காலதாமதம், ரெயில் சேவை பாதிப்பு
தேசிய செய்திகள்

டெல்லியில் கடும் பனி: 40 உள்நாட்டு விமானங்கள் காலதாமதம், ரெயில் சேவை பாதிப்பு

தினத்தந்தி
|
10 Jan 2023 5:41 AM GMT

டெல்லியில் கடும் பனி, தெளிவற்ற வானிலையால் 40 உள்நாட்டு விமானங்களின் புறப்பாடு காலதாமதம் அடைந்து உள்ளன.



புதுடெல்லி,


இந்தியாவின் வடமாநிலங்களில் கடும் பனி காணப்படுகிறது. டெல்லியில் வரலாற்றில் இல்லாத வகையில் கடந்த வாரத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு குறைந்த வெப்பநிலை பதிவானது.

இதனால், கார், பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்து, ரெயில், விமான சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனையொட்டி, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட இன்றைய தினத்திற்கான வானிலை அறிவிப்பில், பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் இன்று காலை அடர் முதல் தீவிர அடர்பனி படலம் காணப்படும் என தெரிவித்து உள்ளது.

இந்த முன்னறிவிப்பின்படி, பஞ்சாப்பின் சில பகுதிகள், ராஜஸ்தானின் வடமேற்கு, ஜம்மு பிரிவு, அரியானா, சண்டிகர் மற்றும் டெல்லி, உத்தர பிரதேசம், பீகார் மற்றும் திரிபுராவிலும் அடர் முதல் தீவிர அடர்பனி ஏற்பட்டது.

டெல்லியின் பாலம் பகுதியில் காலை 4.30 மணியளவில் தெளிவான பார்வை நிலையானது, பூஜ்யம் என்ற அளவில் இருந்தது. சப்தர்ஜங் பகுதியில் 200 மீட்டர் என்ற அளவில் வானிலை காணப்பட்டது.

இதன்பின் காலை 8.30 மணியளவில் சப்தர்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.4 டிகிரி செல்சியஸ் மற்றும் பாலம் நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.5 டிகிரி செல்சியசும் பதிவானது.

தொடர்ந்து வானிலையில் முன்னேற்றம் காணப்படாத சூழலில், டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் புறப்பட தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பல்வேறு உள்நாட்டு விமானங்கள் கிளம்புவதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது.

விமான நிலையத்திற்கு அடர்பனியால் 18 விமானங்கள் வந்து சேர்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், விமானங்களை மாற்றி விடும் சூழல் காணப்படவில்லை.

இதேபோன்று பனியால் ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது. 36 ரெயில்கள் காலதாமதமுடன் வந்து சேரும் என வடக்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்