< Back
தேசிய செய்திகள்
மலைநாடு, கடலோர மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை;  கால்வாயில் அடித்து செல்லப்பட்டு சிறுமி சாவு
தேசிய செய்திகள்

மலைநாடு, கடலோர மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை; கால்வாயில் அடித்து செல்லப்பட்டு சிறுமி சாவு

தினத்தந்தி
|
5 July 2022 8:51 PM IST

மலைநாடு, கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கால்வாயில் அடித்து செல்லப்பட்டு 6 வயது சிறுமி உயிரிழந்தாள். இதன்காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மங்களூரு;

தென்மேற்கு பருவமழை தீவிரம்

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால், மாநிலத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்த நிலையில் தற்போது மலைநாடு மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து இடைவிடாமல் கனமழை கொட்டி வருகிறது.

தட்சிண கன்னடா மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நேத்ராவதி, குமாரதாரா, பல்குனி, நந்தினி, சவுபர்ணிகா உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையோரங்களில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவு

தொடர் கனமழை காரணமாக பண்ட்வால் தாலுகா விட்டலாவில் இருந்து கேரள மாநிலம் காசர்கோடுவுக்கு செல்லும் சாலையில் சரத்கா சோதனைச்சாவடி அருகே சாவடி பகுதியில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் சிக்கினார்.

அதிர்ஷ்டவசமாக அந்த நபர் உயிர் தப்பினார். மோட்டார் சைக்கிள் மண்ணில் புதைந்தது. இதையடுத்து அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மங்களூரு அருகே குலசேகர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துகொண்டது.

இதேபோல், உடுப்பி, உத்தரகன்னடா மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். மேலும் சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

44 ஆயிரம் கனஅடி நீர்

மலைநாடு மாவட்டமான சிவமொக்காவிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் சிவமொக்கா அருகே காஜனூர் பகுதியில் உள்ள துங்கா அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அணை ஏற்கனவே நிரம்பி விட்டதால், அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. அதாவது, அணைக்கு வினாடிக்கு 44 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. அந்த தண்ணீர் அப்படியே துங்கா ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் துங்கா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரத்தில் உள்ள மக்கள் ஏற்கனவே பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் கரையோரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சிவமொக்கா நகரில் துங்கா ஆற்று பாலத்தின் அருகே உள்ள மண்டபம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

சிறுமி சாவு

மற்றொரு மலைநாடு மாவட்டமான சிக்கமகளூருவிலும் கடந்த 3 நாட்களாக இடைவிடாது பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் சிக்கமகளூருவில் ஓடும் ஹேமாவதி, துங்கா, பத்ரா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, ஏரி, குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகிறது. மேலும் ஓடைகள், கால்வாய்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

சிக்கமகளூரு மாவட்டம் ஒசப்பேட்டை அருகே தொகரிஹங்கள் பகுதியை சேர்ந்த சுப்ரீதா (வயது 6) நேற்று முன்தினம் தனது அண்ணனுடன் பள்ளிக்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்தாள். அப்போது கால்கள் சேறாக இருந்ததால், அந்தப்பகுதியில் ஓடும் கால்வாயில் சுப்ரீதாவும், அவளது அண்ணனும் கால்களை கழுவ சென்றனர்.

அப்போது கால்வாயில் விழுந்த குடையை எடுக்க முயன்றபோது, சுப்ரீதா கால்வாயில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்டாள். நேற்று முன்தினம் நீண்ட நேரம் தேடியும் அவள் கிடைக்கவில்லை. இதனால் அவள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. நேற்றும் தீயணைப்பு படையினர் ரப்பர் படகு உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் சுப்ரீதாவின் உடல் இன்னும் கிடைக்கவில்லை.

தரைப்பாலம் மூழ்கியது

மேலும், கலசா தாலுகா ஹெம்மக்கி கிராமத்தை சேர்ந்த டிசோசா என்பவரின் வீட்டின் மீது மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதில் அவரது வீடு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிசோசா மற்றும் அவரது மனைவி, பிள்ளைகள் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர்.

பத்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கலசா-ஒரநாடு இடையே ஹெப்பாலே பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கி உள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை காரணமாக நேற்று தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளித்து அந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

இதேபோல், சிக்கமகளூரு மாவட்டத்தில் கலசா, மூடிகெரே, சிருங்கேரி ஆகிய 3 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளித்து கலெக்டர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

மலைநாடு, கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்