< Back
தேசிய செய்திகள்
மும்பையில் கனமழையால் விமான சேவை பாதிப்பு; 50 விமானங்கள் ரத்து
தேசிய செய்திகள்

மும்பையில் கனமழையால் விமான சேவை பாதிப்பு; 50 விமானங்கள் ரத்து

தினத்தந்தி
|
8 July 2024 5:40 PM IST

விமான சேவை பாதிப்பால் 27 விமானங்கள் அருகிலுள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டது.

மும்பை,

மராட்டியத்தில் வழக்கமாக ஜூன் மாதம் 2-வது வாரத்தில் தான் மழைக்காலம் தொடங்கும்.இந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்திலேயே மழைக்காலம் தொடங்கியது. எனினும் மும்பை பெருநகர பகுதிகளை சுற்றியுள்ள மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை.

இதன் காரணமாக மும்பை, தானே நகர்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்தது. இதனால் குடிநீர் பற்றாக்குறையை தடுக்க நகர் பகுதிகளில் குடிநீர் வினியோக அளவு குறைக்கப்பட்டது. தொடர்ந்து ஏரிகளில் குறைந்துவந்த நீர்மட்டம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

இந்தநிலையில் மக்களை மகிழ்விக்கும் வகையில் மும்பை, தானே, பால்கர், நவிமும்பை, ராய்காட் ஆகிய உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. அதிகாலை நேரத்தில் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.

இந்த மழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் இன்று விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன, ஓடுபாதை செயல்பாடுகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மூடப்பட்டன மற்றும் நகரத்தில் கனமழைக்கு பிறகு குறைந்த தெரிவுநிலை காரணமாக 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. 50 விமானங்களில் 42 இண்டிகோ விமானமும், 6 ஏர் இந்தியா விமானமும், 2 அலையன்ஸ் ஏர் விமானமும் அடங்கும்.

மேலும் அதிகாலை 2.22 மணி முதல் அதிகாலை 3.40 மணி வரை விமான நிலையத்தில் ஓடுபாதை செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதால், 27 விமானங்கள் அருகிலுள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விமானங்கள் ஆமதாபாத், ஐதராபாத், இந்தூர் போன்ற நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

மேலும் செய்திகள்