தெலுங்கானாவில் கனமழை நீடிப்பு: முதல் மந்திரி அவசர ஆலோசனை
|தெலுங்கானாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கானாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக ஆசிபாபாத், மாஞ்சேரியால், நிர்மல், நிஜாமாபாத், பெட்டப்பள்ளி, சிரிசில்லா, பூபாலபள்ளி மற்றும் முழுகு உள்ளிட்ட மாவட்டங்கள் தொடர் மழையால் தத்தளித்து வருகின்றன.
குறிப்பாக நேற்று காலை 8.30 மணி வரை பூபாலபள்ளி மாவட்டத்தின் காளீஸ்வரத்தில் 35 செ.மீ., மாஞ்சேரியால் மாவட்டத்தின் கோட்டபள்ளியில் 25 செ.மீ., நிஜாமாபாத் மாவட்டத்தின் நவிபேட்டில் 24 செ.மீ. என கனமழை வெளுத்து வாங்கியுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் இந்த கனமழையால் அணைகள், நீர்த்தேக்கங்கள், குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் ஆறுகள், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.
இந்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஏற்கனவே சிலர் உயிரிழந்துள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சாலைகள், தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதால் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
மாநிலத்தில் நாளையும் (திங்கள் கிழமை) கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. குறிப்பாக அடிலாபாத், மாஞ்சேரியால், நிர்மல், நிஜாமாபாத், பூபாலபள்ளி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
எனவே மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதில் முக்கியமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மந்திரிகளுடன் இன்று முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் தலைமை செயலாளர் உள்பட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதில் மாநிலத்தின் மழை-வெள்ள பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்படும் நிவாரண நடவடிக்கைகளை ஆய்வு செய்த சந்திரசேகர் ராவ், மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார். முன்னதாக மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் சோமேஷ் குமார் காணொலி மூலம் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவர் மழை வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்பதற்கு அனைத்து துறை அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர்களை கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக உயிரிழப்புகள், கால்நடை இழப்புகள் எதுவும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள அறிவுறுத்திய அவர், பொருட்சேதங்களை குறைக்குமாறும் அறிவுறுத்தினார். நீர்நிலைகள் நிரம்பி வழிவதால் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்திய அவர், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக நிவாரண முகாம்களுக்கு மாற்றுமாறும் உத்தரவிட்டார்.