பஞ்சாப்பில் கனமழை; பள்ளி, கல்லூரிகளுக்கு 26-ந்தேதி வரை விடுமுறை
|அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் சனிக்கிழமை வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பக்ரா, பாங்க் உள்ளிட்ட அணைகள் நிரம்பின. அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் காரணமாக குர்தாஸ்பூர், ஹோஷியாபூர், கபூர்தலா, பெரோஸ்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாநிலத்தின் தலைநகரான சண்டிகரிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பஞ்சாப்பில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் காரணமாக மாநிலம் முழுவதும் வரும் 26-ந்தேதி(சனிக்கிழமை) வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் அறிவித்துள்ளார்.