ஆந்திராவில் 200 ஆண்டுகளில் இல்லாத கனமழை - 9 பேர் உயிரிழப்பு
|கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆந்திராவில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமராவதி,
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது. விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆந்திராவில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். விஜயவாடாவில் உள்ள மொகல்ராஜபுரம் பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு, வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த நவுத் மேக்னா(25), பொலம் லட்சுமி(49), புர்காதி லாலு(38) மற்றும் ஜம்பனா அன்னபூர்ணா(55) ஆகிய 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் அடையாளம் தெரியாத மற்றொரு நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், குண்டூர் பகுதியில் ராகவேந்திரா(38) என்ற ஆசிரியர் தனது இரண்டு மாணவர்கள் சவுதிஷ்(6) மற்றும் மன்வித்(9) ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஒரு ஆற்றுப்பாலத்தை கடக்க முயன்றபோது, மழை வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த 3 பேரும் உயிரிழந்தனர்.
மேலும் மங்கலகிரியில் உள்ள கண்டாலயப்பேட்டா கிராமத்தில் நிலச்சரிவால் வீடுகள் மீது கற்பாறைகள் விழுந்ததில் 68 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார். மாநில அரசு சார்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.