ஆக்ராவில் கனமழை; தாஜ்மகாலில் மழைநீர் கசிவு
|ஆக்ராவில் பெய்த கனமழையை தொடர்ந்து தாஜ்மகாலில் மழைநீர் கசிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது தாஜ்மகால். 17-ம் நூற்றாண்டில் முகலாய மன்னர் ஷாஜகான், தனது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டிய இந்த தாஜ்மகால், இன்று இந்தியாவின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இதனைக் காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிற்கு வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லி, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஆக்ராவில் 48 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாஜ்மகாலை சுற்றியுள்ள பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆக்ராவில் கடந்த 24 மணி நேரத்தில் 151 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக ஆக்ராவில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆக்ராவில் பெய்த கனமழையை தொடர்ந்து தாஜ்மகாலில் மழைநீர் கசிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஆக்ரா வட்ட கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் ராஜ்குமார் பட்டேல் கூறுகையில், "தாஜ்மகாலின் பிரதான குவிமாடத்தில் மழைநீர் கசிவு ஏற்பட்டதைக் கண்டோம். ஆனால் அது நுண்துளைகளால் ஏற்பட்ட சாதாரண கசிவுதான். இதனால் பிரதான குவிமாடத்திற்கு எந்த சேதமும் இல்லை. டிரோன் கேமராவைப் பயன்படுத்தி பிரதான குவிமாடத்தை நாங்கள் சோதித்தோம்" என்று தெரிவித்தார். இதனிடையே தாஜ்மகாலில் ஏற்பட்ட நீர்க்கசிவு குறித்து கண்காணிக்க இந்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.