கர்நாடகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
|கர்நாடகத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு:-
தென்மேற்கு பருவமழை
கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் அந்த மாதத்தில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. இதனால் மாநிலத்தில் வறட்சி நிலவியது. அணைகளில் நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் (ஜூலை) தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. இதனால் மாநிலத்தில் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, மலைநாடு மாவட்டமான சிக்கமகளூரு, சிவமொக்கா, ஹாசன் மற்றும் குடகு, வடகர்நாடக மாவட்டமான பெலகாவி, கதக், தார்வார், யாதகிரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்ததுடன், குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துகொண்டது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
6 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மழை குறைந்துள்ளது. மாநிலத்தில் எங்கும் பெரிய அளவில் மழை பொழிவு இல்லை. இந்தநிலையில், கர்நாடகத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 7-ந்தேதி வரை அடுத்த 6 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கர்நாடகத்தில் நாளை (இன்று) முதல் 7-ந்தேதி 6 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உத்தரகன்னடா, உடுப்பி மற்றும் குடகு, ஹாசன், சிக்கமகளூரு, சாம்ராஜ்நகர், மண்டியா, மைசூரு, ராமநகர், கோலார், சிவமொக்கா, துமகூரு மற்றும் பல்லாரி, விஜயநகர், தாவணகெரே, பெலகாவி ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வடக்கு உள்மாவட்டங்களில் சில இடங்களிலும், தெற்கு உள்மாவட்டங்களில் பல இடங்களிலும் கனமழை பெய்யும்.
பெங்களூரு தலைநகர்
பெங்களூருவை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.