சிவமொக்காவில் கனமழை: வீடுகளில் தண்ணீர் புகுந்தது
|சிவமொக்காவில் கனமழை பெய்தது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
சிவமொக்கா-
சிவமொக்காவில் கனமழை பெய்தது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
கனமழை பெய்தது
சிவமொக்கா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மதியம் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. மாலையில் திடீரென சிவமொக்கா டவுன் பகுதியில் கனமழை பெய்தது. இந்த மழை இரவு வரை பெய்தது. இதனால் சிவமொக்கா டவுன், கே.ஆர்.புரம் பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர். சிவமொக்கா டவுனில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை சந்தை நடைபெறும்.
சந்தை நாளான நேற்றுமுன்தினம் அந்த பகுதியில் கனமழை பெய்ததால் விவசாயிகள் கொண்டு வந்த காய்கறிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் பல லட்சம் மதிப்பிலான காய்கறிகள் நாசமாகின. சிவமொக்கா ரெயில் நிலையத்தில் மேற்கூரையில் மழைநீர் ஒழுகியது. இதனால் ரெயில் பயணிகள் அவதி அடைந்தனர்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இதேப்போல் ஒசமனே, வெங்கடேஷ் நகர், காங்கிரஸ் அலுவலக குறுக்கு சாலை போன்ற பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய் நிரம்பி தண்ணீர் வெறியேறி வீடுகளுக்குள் புகுந்தது.
காங்கிரஸ் அலுவலக குறுக்கு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், கார் தண்ணீரில் மூழ்கின. அதேப்பகுதியில் உள்ள 2 வீடுகளில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தன. ஒரு சில இடங்களில் சாலையோரம் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். அவர்கள் மாற்றுப்பாதையில் பல கிலோ மீட்டர் சுற்றி சென்றனர். காற்றுடன் பெய்த மழையால் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.