வடகர்நாடகத்தில் தொடர் மழையால் கதக், விஜயநகர் மாவட்டங்களில் 150 வீடுகள் சேதம்
|வடகர்நாடகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கதக், விஜயநகர் மாவட்டங்களில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
பெங்களூரு:
வடகர்நாடகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கதக், விஜயநகர் மாவட்டங்களில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
தொடர் மழை
கர்நாடகத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதனால் பெலகாவி, கலபுரகி, பீதர், யாதகிரி போன்ற வடகர்நாடக மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அணைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மழையின் தீவிரம் சற்று குறைந்தது.
கதக் மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் மழையால் லக்குந்தி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் கசிவு ஏற்பட்டு மக்கள் தங்குவதற்கு வழியின்றி தவித்து வருகின்றனர். பவித்ரா என்ற பெண் தனது உறவினர் வீட்டிலும், அவரது கணவர் அருகில் உள்ள கோவிலிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். சில வீடுகளின் மேற்கூரையில் தார்பாய்கள் போடப்பட்டுள்ளது.
மேற்கூரை இடிந்தது
பெலகாவி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கொட்டி தீர்க்கும் கனமழையால் கானாப்புரா தாலுகாவில் படரட்டி உள்பட ஏராளமான கிராமங்கள் மழைநீரில் தத்தளிக்கின்றன. நேற்று பெய்த தொடர் மழையால் படரட்டி கிராமத்தில் உள்ள பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
அப்போது அங்கிருந்த 20 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பெலகாவி தாலுகா புடரமனஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது லேசான காயங்களுடன் வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.
1.80 லட்சம் கனஅடி
மராட்டியத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்ததன் எதிரொலியாக கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் யாதகிரி மாவட்டத்தில் உள்ள பசவசாகர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையில் இருந்து 24 மதகுகள் வழியாக வினாடிக்கு 1.80 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த அணை கடந்த 10 நாட்களில் 80 சதவீதம் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ராய்ச்சூர் மாவட்டத்தில் ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சீலஹள்ளி, யரகோடி, யலகுந்தி உள்ளிட்ட கிராமங்களை இணைக்கும் ஆற்றுப்பாலங்கள் நீரில் மூழ்கின. இதனால் அந்த கிராமங்கள் தீவு போல் காட்சி அளிக்கின்றன. முக்கிய ஆற்றுப்பாலங்கள் அருகில் போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பீதர் மாவட்டத்தில் கனமழையால் நெல், சோளம் உள்ளிட்ட விளைபயிர்கள் நீரில் மூழ்கின.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
விஜயநகர் மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் மழைநீரில் மூழ்கி நாசமானது. மேலும் அலமட்டி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் வடகர்நாடகத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.