டெல்லியில் கடும் பனிமூட்டம்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
|கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் வாகனங்கள் பகல் நேரங்களிலும் விளக்கை ஒளிரவிட்டபடி செல்கின்றன.
புதுடெல்லி,
வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. அதிகாலை மற்றும் இரவு வேளையில் குளிரின் அளவு அதிகரித்து மக்களை பாடாய் படுத்துகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வருகிறது.
தொடர்ந்து 4 நாட்களாக நகரின் அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி என்ற அளவில் இருக்கிறது. குறைந்தபட்ச வெப்பநிலை 8 மற்றும் 7 அல்லது அதற்கு கீழும் செல்கிறது. இதனால் மக்கள் கடுங்குளிரை அனுபவித்து வருகிறார்கள்.
இமயமலையில் பனிக்கட்டி அதிகமாக உருவாகி இருப்பதால் அதன் தாக்கம் டெல்லியில் எதிரொலித்து இருக்கிறது. காற்றும் அதிகரித்து இருப்பதால் குளிர் அலைகள் உருவாகி வாகன ஓட்டுனர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அதிகாலை வேளையில் பார்வைத்தூரம் குறையும் அளவுக்கு கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் வாகனங்கள் பகல் நேரங்களிலும் விளக்கை ஒளிரவிட்டபடி செல்கின்றன.