< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் வெப்ப அலை பாதிப்பு; 24 மணிநேரத்தில் 17 பேர் பலி
தேசிய செய்திகள்

டெல்லியில் வெப்ப அலை பாதிப்பு; 24 மணிநேரத்தில் 17 பேர் பலி

தினத்தந்தி
|
20 Jun 2024 5:32 PM IST

டெல்லியில் பழமையான மற்றும் பெரிய நிகாம்போத் காட் தகன பகுதிக்கு நேற்று ஒரே நாளில் 142 உடல்களும், நேற்று முன்தினம் 97 உடல்களும் தகனத்திற்கு கொண்டு வரப்பட்டன.

புதுடெல்லி,

நாட்டின் வடமாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், டெல்லியில் வெப்ப அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது.

கடந்த சில நாட்களாக, அதிகரித்து வரும் வெப்ப அலையின் தாக்கத்திற்கு மக்கள் அதிகளவில் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். வெப்ப அலை மற்றும் வெப்பம் தொடர்புடைய பாதிப்புகளில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் டெல்லி ராம் மனோகர் லோகியா மற்றும் சப்தர்ஜங் ஆகிய மருத்துவமனைகளில் மொத்தம் 17 பேர் உயிரிழந்து உள்ளனர். வெப்ப தாக்கம் சார்ந்த பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதன்படி, சப்தர்ஜங் மருத்துவமனையில் 24 மணிநேரத்தில் 33 நோயாளிகள் சேர்க்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 13 பேர் மரணம் அடைந்து விட்டனர். ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில், வெப்ப தாக்கத்திற்கு ஆளாகி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 22 நோயாளிகளில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.

டெல்லியின் முக்கிய தகன பகுதியான நிகாம்போத் காட் பகுதியில், தகனம் செய்யப்படும் உடல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

எனினும், அவை வெப்ப தாக்கத்துடன் தொடர்புடையவையா? என்பது உறுதி செய்யப்பட முடியவில்லை. இதுபற்றி மிக பழமையான மற்றும் பெரிய தகன பகுதியான நிகாம்போத் காட் சஞ்சலான் சமிதியின் பொது செயலாளர் சுமன் குப்தா கூறும்போது, நேற்று ஒரு நாளில் 142 உடல்கள் தகனத்திற்கு கொண்டு வரப்பட்டன என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

இது தினசரி சராசரியான 50 முதல் 60 உடல்கள் என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 136 சதவீதம் அதிகம் என்றார். நேற்று முன்தினமும் (செவ்வாய் கிழமையன்று) இந்த எண்ணிக்கையானது 97 உடல்கள் என்ற அளவில் அதிகரித்து இருந்தது.

இன்று காலையில் இருந்து 35 உடல்கள் தகனம் செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கை நாளின் இறுதியில் அதிகரிக்க கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்