வயநாடு நிலச்சரிவு: நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி - பினராயி விஜயன்
|நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் இருந்த வீடுகளும் மண்ணால் மூடப்பட்டன. 400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர். இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக தொடர்ந்து 5-வது நாளாக மீட்பு படையினர் முழு வீச்சில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தற்போதுவரை ஆயிரத்திற்கும் அதிமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, வயநாடு நிலச்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரள மாநிலத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 கோடி நிதி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும், பாதிப்புக்குள்ளான வயநாட்டுக்கு தமிழக மீட்புக் குழு சென்று உதவிக்கரம் நீட்டியது. தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் எ.வ.வேலு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் இதற்கான காசோலையை வழங்கியிருந்தார்.
இந்நிலையில், வயநாட்டில் நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்வலைதளத்தில், "தமிழ்நாடு சார்பாகவும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாகவும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டுக்கு ரூ.5 கோடி தொகையளித்த அமைச்சர் எ.வ.வேலுக்கு மனமார்ந்த நன்றி. உங்களின் ஆதரவும், ஒற்றுமையும் வெகுவாக பாராட்டுவதோடு, மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு இது பெரிதும் உதவிகரமாக இருக்கும்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.