விவசாயி உயிரிழந்த சம்பவம்: "இதயத்தை நொறுக்கி விட்டது" - ராகுல் காந்தி கடும் கண்டனம்
|விவசாயி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டுவர வேண்டும் மற்றும் வேளாண் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கங்கள் டெல்லி நோக்கி பேரணி நடத்தும் போராட்டத்தை கடந்த 13-ந் தேதி தொடங்கின.
இந்நிலையில் பஞ்சாப்-அரியானா எல்லையில் நேற்று நடந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி போலீசாருடன் நடந்த மோதலில் உயிரிழந்தார். இதை வன்மையாக கண்டித்துள்ள விவசாய அமைப்புகள், தற்போதைய நெருக்கடிக்கும், உயிரிழப்புக்கும் மத்திய அரசு மட்டுமே காரணம் என குற்றம் சாட்டியுள்ளன. இந்த நிலையில் விவசாயி உயிரிழப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், 'கானவுரி எல்லையில் விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்த செய்தி இதயத்தை நொறுக்கியுள்ளது. அவரது குடும்பத்துக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மோடியின் ஆணவத்தால் கடந்த முறை 700-க்கு மேற்பட்ட விவசாயிகள் உயிர் தியாகம் செய்தனர். தற்போது அது மீண்டும் அவர்களின் வாழ்க்கைக்கு எதிரியாகிவிட்டது. நட்பு ஊடகங்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் பா.ஜனதாவிடம் விவசாயிகளின் கொலை பற்றிய கணக்கை ஒரு நாள் வரலாறு நிச்சயம் கோரும்" என்றும் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.