குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான 236 மனுக்கள் மீது ஏப்ரல் 9-ம் தேதி விசாரணை
|குடியுரிமை சட்டத்திற்கு தடை கோரி வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் கடந்த 12-ந்தேதி வெளியிடப்பட்டன. இத்துடன் இச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இதன்படி பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத அடக்குமுறைக்கு உள்ளாகி, அங்கிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்ட மசோதா வழிவகை செய்கிறது.
குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்துவதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மனு தாக்கல் செய்தது. சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், பல தரப்பில் இருந்தும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜேபி பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவை அனைத்தும் விசாரிக்கப்படும். வருகிற 19-ந்தேதி (இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
அதன்படி, வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையில் வழக்கு உள்ளபோது குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டாது என கூறிவிட்டு தற்போது விதிகளை அமல்படுத்தியுள்ளார்கள் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள் குடியுரிமை திருத்த சட்ட விதிகளுக்கு எதிரான 236 மனுக்கள் குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் 3 மாவட்டங்கள் மற்றும் சில பழங்குடியின பகுதிகள் இந்த சட்டங்களில் கீழ் கொண்டுவரப்படவில்லை; அசாம் தொடர்பான மனுக்கள் விரைவில் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என கூறி விசாரணையை ஏப்ரல் 9 -ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.