டாக்டர் படிப்புக்கு பிணைபத்திரம் வழங்குவது முடிவுக்கு வருகிறது: மத்திய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை
|டாக்டர் படிப்புக்கு பிணைபத்திரம் வழங்குவதை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதுடெல்லி,
டாக்டர்கள் படிப்பை முடித்தவுடன் குறிப்பிட்ட காலம் அரசுப்பணியாற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்து பிணைபத்திரம் வழங்குவது முடிவுக்கு வருகிறது. இது தொடர்பான வழிகாட்டுதல்களை இறுதி செய்வதில் மத்திய சுகாதார அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
நமது நாட்டில் டாக்டர்களுக்கு என பிணைபத்திர கொள்கை ('பாண்ட் பாலிசி') நடைமுறையில் இருந்து வருகிறது.
இதன்படி டாக்டர்கள், தங்கள் பட்டப்படிப்பை முடித்த உடனும், பட்ட மேற்படிப்பு முடித்த உடனும், குறிப்பிட்ட கால கட்டத்துக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் கட்டாயம் வேலை பார்க்க வேண்டும். இதன்படி டாக்டர்கள் செயல்படத்தவறினால் அவர்கள் அந்தந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் நிர்ணயித்துள்ள அபாரத தொகையை அந்த மாநிலத்துக்கு அல்லது மருத்துவ கல்லூரிக்கு செலுத்த வேண்டும்.
ஆனால் இது தொடர்பான ஒரு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அளித்த தீர்ப்பில் டாக்டர்களுக்கான மாநிலங்களின் பிணைபத்திரக்கொள்கை செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும் சில மாநிலங்களில் நிலைமை மிக கடுமையாக இருப்பதாக கூறிய சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் கட்டாய பணி ஆற்றுவது தொடர்பாக ஒரே மாதிரியான கொள்கையை வகுக்க வேண்டும் என்று யோசனை கூறியது.
குழு அறிக்கை
இதுகுறித்து ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்கு சுகாதாரப்பணிகள் தலைமை இயக்குனரகத்தின் முதன்மை ஆலோசகர் டாக்டர் பி.டி.அதானி தலைமையில் மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு குழுவை அமைத்தது. இந்தக்குழு தனது அறிக்கையை 2020 மே மாதம் அளித்தது. அந்த அறிக்கை, தேசிய மருத்துவ கமிஷன் பார்வைக்காக, கருத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
தேசிய மருத்துவ கமிஷன் தனது கருத்தினை கடந்த ஆண்டு மே மாதம் வழங்கியது. அதில், பல்வேறு மாநிலங்களில் மாணவர்களுக்கான பத்திர நிபந்தனை பிரச்சினைகள் குறித்து அறிக்கையில் தெளிவான தீர்வு இல்லை என்பது உள்பட பல்வேறு கருத்துகளை தேசிய மருத்துவ கமிஷன் தெரிவித்தது.
அதைத் தொடர்ந்து இந்த பிரச்சினைகளை மத்திய சுகாதார அமைச்சகம் முழுமையாக ஆய்வு செய்தது. அதைத்தொடர்ந்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தொடர்புடைய பிற பங்குதாரர்களின் கருத்துகளுடன் பிணைபத்திரக் கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறியது. இது தொடர்பாக பல்வேறு கூட்டங்கள் நடைபெற்றன.
சட்டத்தில் இடம் இல்லை
அவற்றில் கீழ்க்கண்ட அம்சங்கள் தெரியவந்தன.
* 2019-ம் ஆண்டு இயற்றிய தேசிய மருத்துவ கமிஷன் சட்டத்திலும் சரி, அதற்கு முன்பு 1956-ல் இயற்றப்பட்ட சட்டத்திலும் மருத்துவ மாணவர்கள் மீதான பிணைபத்திர கொள்கைக்கு வகை செய்யப்படவில்லை.
* தமிழ்நாட்டில் ரூ.5 லட்சம், உத்தரகாண்டில் ரூ.1 கோடி என நிபந்தனையை மீறுவோருக்கு அபராதம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.
* கட்டாய மருத்துவ சேவை காலமும் மாநிலத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது.
* கிராமப்புறங்களில் கட்டாயமாக பணியாற்ற வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை உள்ளது. பிணைபத்திரத்தை பொறுத்தவரையில், அது நிதி சாராததாகவும், நிர்வாகத்தின்கீழ் செயல்படுத்தத்தக்கதாகவும் இருக்க வேண்டும்.
சுகாதார அமைச்சகம் நடவடிக்கை
இந்த நிலையில், தேசிய மருத்துவ கமிஷன் பரிந்துரைகள் அடிப்படையிலான பிணைபத்திர கொள்கையை நீக்குவதற்கான வழிகாட்டுதல்களை இறுதி செய்வதில் மத்திய சுகாதார அமைச்சகம் செயல்பட்டு வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.