கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மத்திய அரசு இன்று அவசர ஆலோசனை
|கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு இன்று நிபுணர்களைக் கூட்டி அவசர ஆலோசனை நடத்துகிறது.
புதுடெல்லி,
ஒமைக்ரான் வைரஸ் மற்றும் அதன் துணை வைரஸ்களால் தூண்டப்பட்ட கொரோனா அலை மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது. குறிப்பாக ஒமைக்ரான் மற்றும் அதன் துணை வைரஸ்களான பிஏ.2, பிஏ.2.38 ஆகியவைதான் இந்த எழுச்சியின் பின்னால் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
தற்போது மராட்டியம், கேரளா, டெல்லி, கர்நாடகம், தமிழ்நாடு, அரியானா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்காளம், குஜராத் ஆகிய 10 மாநிலங்களில் தலா ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, இன்று டெல்லியில் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை கூட்டி உள்ளார். அவர் தலைமையில் நடக்கிற இந்த கூட்டத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் சுஜீத் சிங் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், உயிரிதொழில்நுட்பத்துறை செயலாளர் ராஜேஷ் கோகலே, மருந்து துறை செயலாளர் அபர்ணா உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள். இதில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் எழுச்சி பெற்றிருப்பதை தடுப்பதற்கென யுக்திகள் வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் 4 மாவட்டங்கள் உள்பட நாட்டின் 43 மாவட்டங்களில் வாராந்திர கொரோனா பாதிப்பு விகிதம் 5 முதல் 10 சதவீதம் உள்ளது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஆலோசனைகள் வழங்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.