< Back
தேசிய செய்திகள்
அடுத்த 25 ஆண்டுகளுக்கான சுகாதார வசதிகளை உருவாக்கி இருக்கிறோம்- மத்திய சுகாதார மந்திரி
தேசிய செய்திகள்

அடுத்த 25 ஆண்டுகளுக்கான சுகாதார வசதிகளை உருவாக்கி இருக்கிறோம்- மத்திய சுகாதார மந்திரி

தினத்தந்தி
|
30 July 2022 10:46 PM IST

பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் அடுத்த 25 ஆண்டுகளுக்கான சுகாதார வசதிகளை நாட்டில் உருவாக்கி உள்ளோம் என்று மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கூறினார்.

'தனக்கு முன் சேவை'

டெல்லியில் அடல் பிகாரி வாஜ்பாய் மருத்துவ கல்லூரி மற்றும் டாக்டர் ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரியின் 4-வது நிறுவன நாள் மற்றும் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.

இந்த விழாவுக்கு மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பெருந்தொற்றை சமாளிப்பதில் நமது திறனை உலகம் சந்தேகப்பட்டது. அப்போது நமது நாட்டின் மருத்துவ நிபுணர்களும், சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து 'தனக்கு முன் சேவை' என்ற பாரம்பரியத்தை செயலில் காட்டினர்.

பிரதமர் தொலைநோக்கு பார்வை

நாம் பொது முடக்க வழிகாட்டும் நெறிமுறைகளையும், சுகாதார அறிவுறுத்தல்களையும் சிறப்பாக பின்பற்றினோம். இதுதான், கொரோனா தெருந்தொற்றில் இருந்து விடுபட்டு, சாதகமான வளர்ச்சிப்பாதையில் மீண்டும் அடியெடுத்து வைத்த முதல் நாடாக நம் நாட்டை ஆக்கியது. இந்தியாவை முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்வதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய தலைமைத்துவத்தால், நாட்டில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான சுகாதார வசதிகளை உருவாக்கி உள்ளோம். இது நமது மருத்துவ வல்லுனர்களுக்கு மகத்தான வாய்ப்புகளை வழங்குகிறது. அதுமட்டுமின்றி, நமது தேசத்தை கட்டியெழுப்புகிற அனைவரும் நமது குடிமக்களுக்கு சிறப்பாக பணியாற்ற அனுமதிக்கிறது.

ஆரோக்கிய இந்தியா-வளமான இந்தியா

நமது நாட்டில் மருத்துவம் அடையக்கூடியதாக, மலிவானதாக, நோயாளிகளுககு உகந்த சுகாதார பராமரிப்பு அமைப்பினை நோக்கி நகர்ந்துள்ளது.

நாட்டின் அனைத்து விதமான சுகாதார கட்டமைப்புகளையும் வலுப்படுத்தி, அனைவருக்கும், நாட்டின் கடைக்கோடியில் இருப்போருக்கும், ஆரோக்கியம் என்பதை உறுதிபடுத்துவதுதான் இதன் நோக்கம் ஆகும்.

ஆரோக்கியமான இந்தியாவாக இருந்தால்தான், வளமான இந்தியாவை உறுதி செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்