கள்ளத்தொடர்பால் வந்த வினை; சூப்பிரெண்டாக இருந்தவரை கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்து அதிரடி
|உன்னாவ் போலீஸ் சூப்பிரெண்டிடம் விடுமுறைக்கான அனுமதி பெற்று விட்டு, வீட்டுக்கு செல்வதற்கு பதிலாக கான்பூர் அருகே உள்ள ஓட்டல் ஒன்றிற்கு கன்னவ்ஜியா சென்றுள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரெண்டாக இருந்தவர் கிருபா சங்கர் கன்னவ்ஜியா. இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன் அவருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு ஒன்று, அவருடைய வேலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.
கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 6-ந்தேதி குடும்ப காரணங்களுக்காக, உன்னாவ் போலீஸ் சூப்பிரெண்டிடம் விடுமுறைக்கான அனுமதி பெற்று விட்டு புறப்பட்டு சென்றார்.
ஆனால், வீட்டுக்கு செல்வதற்கு பதிலாக அவர், கான்பூர் அருகே உள்ள ஓட்டல் ஒன்றிற்கு சென்றுள்ளார். அவருடன் பெண் கான்ஸ்டபிள் ஒருவரும் சென்றிருக்கிறார். கன்னவ்ஜியா தன்னிடம் இருந்த தனிப்பட்ட செல்போன் மற்றும் அலுவலக உபயோகத்திற்கான செல்போன் ஆகியவற்றை சுவிட்ச்-ஆப் செய்துள்ளார்.
இதுதெரியாமல் அவரை, அவருடைய மனைவி செல்போனில் அழைத்திருக்கிறார். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், பதறி போன மனைவி, உன்னாவ் போலீஸ் சூப்பிரெண்டை தொடர்பு கொண்டு உதவி கேட்டிருக்கிறார்.
அவர் போலீசாரின் துணையுடன் ஆய்வு செய்ததில், கான்பூரிலுள்ள ஓட்டலில் கடைசியாக கன்னவ்ஜியாவின் மொபைல் நெட்வொர்க் செயல்பாட்டில் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் குழு ஒன்று ஓட்டலுக்கு சென்றது. ஓட்டல் அறையில் இருவரையும் கண்டறிந்தது. அவர்கள் இருவரும் தகாத உறவில் இருந்துள்ளனர்.
இதனை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஓட்டலுக்குள் ஒன்றாக நுழைந்த சி.சி.டி.வி. காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனை தொடர்ந்து, அந்த அதிகாரி தொடர்புடைய வீடியோ ஒன்றையும் உன்னாவ் போலீசார் சான்றுக்காக எடுத்து வைத்து கொண்டனர். இதுபற்றிய அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்டது.
இதன்பின்னர், இந்த விவகாரம் பற்றி தீவிர ஆய்வு செய்ததில், கன்னவ்ஜியாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி லக்னோ சரக ஐ.ஜி. பரிந்துரைத்து உள்ளார். அவரை கான்ஸ்டபிளாக பதவியிறக்கம் செய்யும்படி அரசு சார்பில் பரிந்துரைக்கான உத்தரவும் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, கோரக்பூர் பட்டாலியனில் அவர் கான்ஸ்டபிளாக பணியமர்த்தப்பட்டு உள்ளார்.