< Back
தேசிய செய்திகள்
மதுபோதையில் வந்த பயணியை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளிய அரசு பஸ் கண்டக்டர்
தேசிய செய்திகள்

மதுபோதையில் வந்த பயணியை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளிய அரசு பஸ் கண்டக்டர்

தினத்தந்தி
|
8 Sept 2022 9:01 PM IST

மதுபோதையில் வந்த பயணியை காலால் எட்டி உதைத்து அரசு பஸ் கண்டக்டர் கீழே தள்ளிய அதிர்ச்சி சம்பவம் புத்தூரில் நடந்துள்ளது. இதுதொடர்பாக வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மங்களூரு;


மதுபோதையில் வந்த பயணி

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரில் இருந்து நேற்று முன்தினம் கர்நாடக அரசு பஸ் ஒன்று அருகில் உள்ள கிராமத்துக்கு சென்றது. இந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். இந்த நிலையில் பஸ், புத்தூர் அருகே ஈஸ்வரமங்கலம் என்ற கிராமத்தில் நின்றபோது, பயணி ஒருவர் மதுபோதையில் தள்ளாடியப்படி பஸ்சில் ஏறினார்.

அப்போது பஸ்சில் கண்டக்டராக இருந்த சுக்ராஜ் ராய், அந்த பயணியை பஸ்சில் ஏறவிடாமல் தடுத்தார். ஆனாலும் அவர் பஸ்சில் ஏற முற்பட்டபோது, கண்டக்டர் அவரது உடைமைகளை பிடுங்கி கீழே எறிந்தார்.

எட்டி உதைத்த கண்டக்டர்

இதையடுத்து மதுபோதையில் வந்த பயணியை கண்டக்டர் சுக்ராஜ் ராய், தாக்கியதுடன் அவரை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளினார். இதில் அந்த போதை பயணி சாலையில் உருண்டு விழுந்தார். இதையடுத்து அரசு பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனை அந்தப்பகுதியில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.கண்டக்டரின் இந்த மனிதாபிமானமற்ற செயலை பல்வேறு தரப்பினரும் கண்டித்தனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


பணி இடைநீக்கம்

மதுபோதையில் பஸ்சில் ஏறிய பயணியை தாக்கியதுடன் காலால் எட்டி உதைத்து கண்டக்டர் கீழே தள்ளிய வீடியோ வைரலாகியதை தொடர்ந்து கண்டக்டர் சுக்ராஜ் ராய் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து கே.எஸ்.ஆர்.டி.சி. புத்தூர் கோட்ட கண்காணிப்பாளர் ஜெய்கர் ஷெட்டி கூறுகையில், இந்த சம்பவம் குறித்து இதுவரை எனக்கு எந்த புகாரும் வரவில்லை. வீடியோவை பார்த்து தான் இந்த சம்பவத்தை தெரிந்து கொண்டேன். கண்டக்டர், டிரைவர்கள் பயணிகளை தாக்க எந்த உரிமையும் இல்லை. நாங்கள் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்து கொண்டு கண்டக்டர் சுக்ராஜ் ராயை பணி இடைநீக்கம் செய்துள்ளோம். இந்த சம்பவம் நடந்திருக்கக்கூடாது என்றார்.

மேலும் செய்திகள்