< Back
தேசிய செய்திகள்
விடுதியில் இருந்து ஜன்னல் வழியாக தப்பிய கல்லூரி மாணவிகள் 3 பேர் சென்னையில் மீட்பு
தேசிய செய்திகள்

விடுதியில் இருந்து ஜன்னல் வழியாக தப்பிய கல்லூரி மாணவிகள் 3 பேர் சென்னையில் மீட்பு

தினத்தந்தி
|
25 Sept 2022 1:15 PM IST

விடுதியில் இருந்து ஜன்னல் வழியாக தப்பிய கல்லூரி மாணவிகள் 3 பேர் சென்னையில் மீட்கப்பட்டனர். அவர்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் பெற்றோருக்கு பயந்து ஓடியது தெரியவந்தது.

மங்களூரு;


3 மாணவிகள் தப்பி ஓட்டம்

மங்களூரு டவுன் விமான நிலைய சாலையில் தனியார் பி.யூ. கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பெங்களூருவை சேர்ந்த 2 மாணவிகளும், சித்ரதுர்காவை சேர்ந்த ஒரு மாணவியும் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் விடுதியில் தங்கி இருந்த அவர்கள் 3 பேரும் கடந்த 21-ந்தேதி அதிகாலை 3 மணி அளவில் விடுதியின் ஜன்னல் வழியாக வெளியே வந்து, தப்பி ஓடினர். அந்த 3 மாணவிகளும் உடைமைகளுடன் செல்வது விடுதி சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

மேலும் அவர்கள் தங்கள் அறையில் 'நாங்கள் வெளியேறுகிறோம், எங்களை மன்னிக்கவும்' என்று எழுதி வைத்திருந்தனர். இதுகுறித்து கங்கனாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் 3 மாணவிகளையும் தேடி வந்தனர்.

சென்னையில் மீட்பு

இந்த நிலையில் மாயமான 3 மாணவிகளும் ெசன்னையில் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து கங்கனாடி போலீசார், ெசன்னை போலீசார் உதவியுடன் 3 மாணவிகளையும் மீட்டனர். அவர்களை மங்களூருவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

மங்களூருவில் தனியார் கல்லூரி விடுதியில் இருந்து மாயமான 3 மாணவிகளும் சென்னையில் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 3 பேரும் சென்னையில் சுற்றித்திரிந்துள்ளனர். அவர்களிடம் செல்போன் இல்லை. பெற்றோர் கொடுத்த பணத்தில் சென்னைக்கு ரெயிலில் சென்றுள்ளனர்.

சென்னை போலீசார் உதவியுடன் 3 மாணவிகளும் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் மங்களூருவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவிகள் மீட்கப்பட்டது குறித்து அவர்களது பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த மதிப்பெண் எடுத்ததால்...

3 மாணவிகளும் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளனர். இதனால் அவர்கள் ெபற்றோரை எதிர்கொள்ள பயந்து, விடுதியில் இருந்து தப்பி சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல முடிவு எடுத்து சென்றுள்ளனர். ஆனால் சென்னையில் உறவினரின் முகவரி தெரியாததால், அங்கு சுற்றித்திரிந்த போது ெசன்னை போலீசார் அவர்களை பிடித்து விசாரித்து கங்கனாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு நன்றாக படிக்கும்படியும், அதிக மதிப்பெண் எடுக்கும்படியும் அழுத்தம் கொடுக்கக்கூடாது. விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை மாதம் ஒரு முறை பெற்றோரை சந்திக்க கல்வி நிறுவனம் அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்