தேசியவாத காங்கிரஸ் சின்னம், பெயர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சரியான முடிவு எடுக்கும் - சரத்பவார் அணி தலைவர்
|தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னம், பெயர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சரியான முடிவு எடுக்கும் என சரத்பவார் அணி தலைவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
கட்சி பிளவு
தேசியவாத காங்கிரஸ் கட்சி கடந்த ஜூலை மாதம் 2-ஆக உடைந்தது. அந்த கட்சி சரத்பவார் மற்றும் அஜித்பவார் தலைமையில் 2 அணியாக செயல்பட்டு வருகிறது. பா.ஜனதா கூட்டணியில் இணைந்த அஜித்பவார் மாநில துணை முதல்-மந்தியாக உள்ளார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மந்திரிகளாக உள்ளனர். சரத்பவார் 'இந்தியா' கூட்டணியில் முக்கிய தலைவராக உள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என அஜித்பவார், சரத்பவார் என இரு அணிகளும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளனர். கட்சியின் பெயர், சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்வோம் என சமீபத்தில் அஜித்பவார் கூறினார்.
சரியான முடிவு எடுக்கும்
இந்தநிலையில் கட்சியின் பெயர், சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சரியான முடிவு எடுக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக சரத்பவார் அணி தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " கட்சியின் பெயர், சின்னம் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளோம். தற்போது அரசியல் கட்சிகள் திருடப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. எனினும் எங்களுக்கு தேர்தல் ஆணையம் சரியான முடிவு எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருப்பவர். அவரை சிலர் ஓரங்கட்ட முயற்சி செய்து உள்ளனர் " என்றார்.
மேலும் அவர், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.