உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பக்தர்கள் பலி: ராஜ்நாத் சிங், ராகுல் காந்தி, மாயாவதி இரங்கல்
|பக்தர்களில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஹத்ராஸ்,
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் இன்று இந்து மத சத்சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து மக்கள் புறப்பட்டபோது கடும் நெரிசல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் முண்டியடித்து சென்றபோது பலர் கீழே விழுந்தனர். நெரிசலில் சிக்கி இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலர் உயிரிழந்து வருகின்றனர். சிலருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் இந்த துயர சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற இடத்தில் சத்சங்கத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பக்தர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று நம்புகிறேன்.
காயமடைந்தவர்களுக்கு அனைத்து விதமான சிகிச்சையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமும் வழங்க வேண்டும் என்று அரசு நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன். அனைத்து இந்தியா உறுப்பினர்களும், நிவாரணம் மற்றும் மீட்புக்கு தங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று அதில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் வலை தளத்தில், "உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மாநில அரசின் மேற்பார்வையில், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி தனது எக்ஸ் வலைதளத்தில், "உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் சத்சங்கத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஏராளமானோர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் மற்றும் ஆக்ராவில் பவுத்/பீம் கதாவின் போது ஒரு இளைஞன் கொல்லப்பட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த சம்பவங்கள் குறித்து அரசு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும்" என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.