< Back
தேசிய செய்திகள்
ஹத்ராஸ் சம்பவம்: போலே பாபா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாயாவதி
தேசிய செய்திகள்

ஹத்ராஸ் சம்பவம்: போலே பாபா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாயாவதி

தினத்தந்தி
|
6 July 2024 8:23 AM GMT

போலே பாபா போன்ற மற்ற பாபாக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் அருகே புல்ராய் கிராமத்தில் கடந்த 2-ந் தேதி சாமியார் போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. அந்த நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சிக்கந்திரா ராவ் போலீசார் பாரதீய நியாய சன்ஹிதா சட்டத்தின் 105 மரணம் விளைவித்தல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த 2 பெண் உள்பட 6 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நாட்டில் உள்ள ஏழைகள், தலித்துகள், ஒடுக்கப்பட்டோர் போன்றோர் தங்கள் வறுமையையும் மற்ற அனைத்துத் துன்பங்களையும் போக்குவதற்கு, ஹத்ராஸின் போலே பாபா போன்ற பல பாபாக்களின் மூடநம்பிக்கையால் தவறாக வழிநடத்தப்பட்டு, தங்கள் துயரத்தையும் துன்பத்தையும் அதிகரிக்கக் கூடாது.

மாறாக, பாபா சாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் காட்டிய பாதையில் ஆட்சியைப் பிடித்து தங்கள் தலைவிதியை மாற்றிக் கொள்ள வேண்டும்.இந்த சம்பவத்தில் 121 பேர் உயிரிழந்தது மிகவும் கவலை அளிக்கிறது.

ஹத்ராஸ் சம்பவத்தில், குற்றவாளியான போலே பாபா மற்றும் மற்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவரை போன்ற மற்ற பாபாக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இனியும் மக்கள் உயிரிழக்கக் கூடாது என்பதற்காக, அரசியல் நலன்களில் அரசு மெத்தனமாக இருக்கக் கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்