பா.ஜனதாவினர் எப்போதாவது பாதயாத்திரை நடத்தியது உண்டா?; காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கேள்வி
|பா.ஜனதாவினர் எப்போதாவது பாதயாத்திரை நடத்தியது உண்டா? என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் சிவமொக்கா மாவட்டம் சாகரில் நேற்று, ராகுல் காந்தியின் பாதயாத்திரையின்போது விபத்தில் உயிரிழந்த காங்கிரஸ் தொண்டர் ரமேஷ் என்பவரின் வீட்டிற்கு சென்றார். அங்கு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார். அதன் பிறகு டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ராகுல் காந்தி கர்நாடகத்தில் ஒற்றுமை பாதயாத்திரை நடத்தியபோது, ஒரு விபத்தில் தொண்டர் ரமேஷ் என்பவா் உயிரிழந்தார். இன்று (நேற்று) அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினேன். ராகுல் காந்தியின் பாதயாத்திரை குறித்து பா.ஜனதாவினர் விமர்சிக்கிறார்கள். பா.ஜனதாவினர் எப்போதாவது இத்தகைய பாதயாத்திரை நடத்தி இருக்கிறார்களா?. காங்கிரஸ் ஏற்படுத்தி கொடுத்த ஜனநாயக நடைமுறையால் பா.ஜனதா இன்று ஆட்சியில் உள்ளது. அவர்கள் விமர்சனம் செய்யட்டும். நாங்கள் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு கொண்டிருக்கிறோம். மல்லிகார்ஜுன கார்கே கட்சியின் தேசிய தலைவர் ஆனதால், எனக்கும், சித்தராமையாவுக்கும் பயம் ஏற்பட்டுள்ளதா?.
பா.ஜனதாவினர் பொய் தகவல்களை பரப்புகிறார்கள். அவர்களின் கருத்தை மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.