< Back
தேசிய செய்திகள்
அரியானா வன்முறையில் இதுவரை 176 பேர் கைது
தேசிய செய்திகள்

அரியானா வன்முறையில் இதுவரை 176 பேர் கைது

தினத்தந்தி
|
4 Aug 2023 2:08 AM IST

அரியானா வன்முறையில் இதுவரை 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சமூக வலைத்தளங்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

மத ஊர்வலத்தில் வன்முறை

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த 31-ந் தேதி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் குறிப்பிட்ட ஒரு பகுதியை நெருங்கியபோது ஒரு கும்பல் ஊர்வலத்தில் கல் வீசி தாக்கியது. இதனால் இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சற்று நேரத்துக்குள்ளாக இந்த மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது. கடைகள், வாகனங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டன.

தொடர்ந்து, குருகிராம் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கு வன்முறை பரவியது. வன்முறையில் இதுவரை 2 ஊர்க்காவல்படை வீரர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

96 வழக்குகள்; 176 பேர் கைது

வன்முறை பாதித்த பகுதிகளில் மாநில போலீஸ் படைகளுடன் துணை ராணுவ படைகள் குவிக்கப்பட்டு நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வன்முறை தொடர்பாக இதுவரை 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நூ, குருகிராம் உள்ளிட் 5 மாவட்டங்களில் 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரியானா நிர்வாக சேவை அதிகாரி பிரசாத் தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டம் ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையில், ஆத்திரமூட்டும் வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சு போன்றவை பரப்பப்படுவதை தடுக்க சமூக வலைத்தளங்களை கண்காணிக்க ஒரு குழுவை அரசு அமைத்துள்ளதாக அவர் கூறினார்.

அமைதி காக்க அழைப்பு

இதனிடையே நூ மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதிக்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் தீவைத்தனர். எனினும் அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் நடந்த அடுத்த சில மணி நேரத்தில் அருகில் உள்ள மற்றொரு மசூதியில் தீப்பற்றியது. ஆனால் இது வன்முறை செயல் அல்ல எனவும், மின்கசிவின் காரணமாக மசூதியில் தீப்பற்றியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும், தேவையற்ற மற்றும் ஆத்திரமூட்டும் பதிவுகளை சமூகவலைத்தளங்களில் வெளியிடுவதையோ, பிறருக்கு பகிர்வதையோ முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும் மாநில உள்துறை மந்திரி அனில் விஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

பா.ஜ.க. குற்றச்சாட்டு

இந்த நிலையில் அரியானா வன்முறையில் காங்கிரஸ் கட்சியின் பங்கு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும், விசாரணையில் உண்மை வெளிவரும் என்றும் பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

டெல்லியில் பா.ஜ.க. தலைமையகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி, "அரியானா சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மம்மன் கான் ஆத்திரமூட்டும் வகையில் கருத்து தெரிவித்தார். அவரது சமூக வலைத்தள பதிவு மற்றும் வீடியோ வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. இது ஆழமான சந்தேகத்தை எழுப்புகிறது. இந்த வன்முறை மிகப்பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். வழக்கு விசாரணையின் போது உண்மை வெளிவரும்" என கூறினார்.

மேலும் செய்திகள்