< Back
தேசிய செய்திகள்
அரியானாவில் புதிய அரசு பதவியேற்பது எப்போது..? வெளியான அறிவிப்பு
தேசிய செய்திகள்

அரியானாவில் புதிய அரசு பதவியேற்பது எப்போது..? வெளியான அறிவிப்பு

தினத்தந்தி
|
13 Oct 2024 5:57 AM IST

அரியானாவில் முதல்-மந்திரி நயாப் சிங் சைனி தலைமையில் புதிய அரசு பதவியேற்க உள்ளது.

சண்டிகார்,

அரியானாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 3-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் அந்த கட்சி முதல் முறையாக 48 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 37 இடங்களிலும், இந்திய தேசிய லோக்தளம் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. 3 சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அங்கு புதிய அரசை அமைப்பதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா தொடங்கியது. இதற்காக முதல்-மந்திரி நயாப் சிங் சைனி டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து புதிய அரசு பதவியேற்பு குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது.

அதன்படி நயாப் சிங் சைனி தலைமையிலான புதிய அரசு வருகிற 17-ந் தேதி பதவியறே்கும் என பா.ஜனதா அறிவித்து உள்ளது. இதற்காக பிரதமர் மோடியின் ஒப்புதல் கிடைத்திருப்பதாகவும், பஞ்ச்குலாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய அரசு பதவியேற்கும் என்றும் மத்திய மந்திரியும், முன்னாள் முதல்-மந்திரியுமான மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.

முன்னதாக அரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் முதல்-மந்திரியாக மனோகர் லால் கட்டார் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்-மந்திரியாக நயாப் சிங் சைனி பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்றதை அடுத்து புதிய அரசு வரும் 17ம் தேதி பதவியேற்க உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட மத்திய மந்திரிகள் பலர் பங்கேற்க உள்ளனர். பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்