அரியானா முதல்-மந்திரியாக நயாப் சிங் சைனி பதவியேற்பு
|அரியானாவின் முதல்-மந்திரியாக இருந்த மனோகர் லால் கட்டார் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டிகார்,
அரியானாவில் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. எனினும், கூட்டணி கட்சிகளின் உதவியுடனேயே அரசு நடந்து வரும் சூழலில், அதில் அங்கம் வகிக்கும் ஜனநாயக ஜனதா கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் போக்கு காணப்பட்டது.
ஜனநாயக ஜனதா கட்சியின் சார்பில் துணை முதல்-மந்திரியாக உள்ள துஷ்யந்த் சவுதாலாவுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. பா.ஜ.க.வுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி முறித்து கொள்ள உள்ளது என வெளியான தகவலை முன்னிட்டு அரியானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சூழலில், அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தனது பதவியை இன்று காலை ராஜினாமா செய்தார். அவர் தன்னுடைய மந்திரி சபையை சேர்ந்த சகாக்களுடன் சென்று கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் அதற்கான கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார். உடனடியாக அவரது மந்திரிகள் அனைவரும் ராஜினாமா செய்தனர். இதனால் அரியானா அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதையடுத்து அரியானாவின் புதிய முதல்-மந்திரியாக நயாப் சிங் சைனி தேர்வு செய்யப்பட்டார் எனவும் இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்பார் என தகவல் வெளியானது.
இந்நிலையில் அரியானாவில் முதல்-மந்திரியாக நயாப் சிங் சைனி பதவியேற்று கொண்டார். அம்மாநில கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா இவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு முன்பாக நயாப் சிங் சைனி அரியானா மாநில பா.ஜ.க தலைவராகவும், குருஷேத்திரா மக்களவைத் தொகுதி எம்.பி.யாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.