அரியானா வன்முறை பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு; டெல்லியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
|அரியானாவில் நேற்று பகலில் வன்முறை சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் நேற்று இரவு சில இடங்களில் மீண்டும் வன்முறை தலைதூக்கியது.
புதுடெல்லி,
அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நேற்று முன்தினம் விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலம் நடந்தது. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் மீது சில மர்ம மனிதர்கள் கல்வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் கலவரமாக வெடித்தது.
கலவரத்தில் 2 ஊர்க்காவல் படை வீரர்கள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், அருகில் உள்ள குருகிராம் மாவட்டத்துக்கும் கலவரம் பரவியது. அங்கு வீடுகள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அங்கு ஒருவர் பலியானார். இதன் காரணமாக அரியானா வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
அரியானாவில் வகுப்புவாத வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று முதல் மந்திரி மனோகர் லால் கட்டா இன்று தெரிவித்தார்
நேற்று பகலில் வன்முறை சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் நேற்று இரவு சில இடங்களில் மீண்டும் வன்முறை தலைதூக்கியது.
நூ மற்றும் குருகிராம் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. என்றாலும் நேற்று இரவு சில இடங்களில் கடைகளுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன.
குருகிராம்-சோனா சாலையில் பல இடங்களில் தாக்குதல்கள் நடந்தன. குருகிராம் பத்சாப்பூரில் சாலையோர உணவகத்துக்கு தீ வைக்கப்பட்டது. அருகில் உள்ள மார்க்கெட்டில் இருந்த கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
குருகிராம் 70-வது செக்டார் பகுதிகளிலும் நேற்று இரவு பல கடைகள் சூறையாடப்பட்டன. கலவரம் தொடர்பாக இரு மாவட்டங்களிலும் 90 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக இரு மாவட்டங்களில் பெட்ரோல்-டீசல் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
குருகிராம் மாவட்டத்துக்கு கூடுதலாக போலீஸ் படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. துணை நிலை ராணுவத்தினரும் மற்றும் அதிரடிப்படையினரும் முக்கிய இடங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அரியானாவில் ஏற்பட்டுள்ள வன்முறையால் டெல்லியில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
டெல்லிக்குள் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டு உள்ளனர். சாலைகளில் வழக்கத்தை விட அதிகளவு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
பதற்றம் ஏற்படலாம் என்று கணக்கிடப்பட்டுள்ள டெல்லி மற்றும் டெல்லி புறநகர் பகுதிகளில் டிரோன்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். பல பகுதிகளில் துணைநிலை ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் தேவை இல்லாமல் சமூக வலைதளங்களில் வரும் வதந்தி தகவல்களை நம்ப வேண்டாம் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. அரியானாவில் நிகழ்ந்த வன்முறை திட்டமிட்ட சதி என்று அம்மாநில முதல்-மந்திரி கட்டார் குற்றம் சுமத்தி உள்ளார். அவரிடம் இன்று காலை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
வன்முறை நடத்தி தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக விஸ்வ இந்து பரிஷத்தும் குற்றம் சுமத்தி உள்ளது. தங்கள் மீதான தாக்குதலை கண்டித்து பாரத் பந்த் நடத்தப்போவதாக விஸ்வ இந்து பரிஷத் அறிவித்தது. இதையடுத்து வடமாநிலங்களில் பல இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.