"எனது வாழ்க்கையின் மிகப்பெரிய மகிழ்ச்சி இதுதான்"- மீண்டும் இணையத்தை ஆக்கிரமித்த ரத்தன் டாடாவின் உரை
|ஹர்ஷ் கோயங்கா சமீபத்தில் பதிவிட்ட ரத்தன் டாடா-வின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை,
நாட்டின் முன்னணி நிறுவனமான ஆர்.பி.ஜி குரூப்-ன் தலைவராக இருப்பவர் ஹர்ஷ் கோயங்கா. முன்னணி தொழிலதிபரான இவர் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர்.
தனித்துவமான விஷயங்களை கண்டறிந்து அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவிடும் இவர் அதன் மூலம் இணையவாசிகளிடம் கவனம் பெற்றார். இந்த நிலையில் தற்போது ஹர்ஷ் கோயங்கா சமீபத்தில் பதிவிட்ட ரத்தன் டாடா-வின் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் ரத்தன் டாடா பேசுகையில், மற்றவர்களால் இயலாது என்று முத்திரை குத்தப்பட்ட விஷயங்களை செய்ய முயற்சிப்பதே தனது வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது என்று கூறியுள்ளார்.
ஆட்டோமொபைல் சந்தையில் ரூ.1 லட்சத்தில் கார் தயாரிக்க முடியாது என பலர் கூறியபோதும், ரத்தன் டாடா தான் வடிவமைத்து தேவையில்லாத செலவுகளைக் குறைத்து 1 லட்சம் ரூபாயில் டாடா நேனோ கார்-ஐ அறிமுகம் செய்தார். இதனை குறிப்பிட்டே அந்த வீடியோவில் அவ்வாறு பேசியுள்ளார்.
ஹர்ஷ் கோயங்கா பகிர்ந்துள்ள ரத்தன் டாடா-வின் இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்து வருகின்றனர். டாடா-வின் இந்த உரை, தங்கள் வாழ்க்கையில் அடுத்த தளத்திற்குச் முன்னேறி செல்வதற்கு ஊந்துக்கோலாக இருக்கும் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.