< Back
தேசிய செய்திகள்
இஸ்லாமுக்கு மதம் மாற மறுத்த காதல் மனைவிக்கு சித்ரவதை
தேசிய செய்திகள்

இஸ்லாமுக்கு மதம் மாற மறுத்த காதல் மனைவிக்கு சித்ரவதை

தினத்தந்தி
|
19 Nov 2022 12:15 AM IST

சித்ரதுர்காவில், இஸ்லாமுக்கு மதம் மாற மறுத்த காதல் மனைவியை சித்ரவதை செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

சித்ரதுர்காவில், இஸ்லாமுக்கு மதம் மாற மறுத்த காதல் மனைவியை சித்ரவதை செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

காதல் திருமணம்

சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் உமா. இவர் சித்ரதுர்கா டவுனில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். அந்த சந்தர்ப்பத்தில் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த வியாபாரியான அப்துல் காதர் என்பவருக்கும், உமாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இவர்களது காதலுக்கு உமாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி உமா வீட்டைவிட்டு வெளியேறி தனது காதலன் அப்துல் காதரை திருமணம் செய்து கொண்டார்.

கால்கள் செயலிழந்தன

பின்னர் அவர்கள் சித்ரதுர்காவில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் உமாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதன் விளைவாக உமாவின் 2 கால்களும் செயலிழந்தன. இதன்காரணமாக அவரால் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாமல் போனது. இதைக்காரணம் காட்டி உமாவை அப்துல் காதர் அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தினார்.

அடிவயிற்றிலும் சரமாரியாக தாக்கினார். பின்னர் அவர் உமாவை இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என்று கூறினார். ஆனால் உமா இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்துவிட்டார். இதனால் அவரை மேலும் கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்தார்.

இஸ்லாம் மதத்திற்கு...

ஒரு கட்டத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று கூறி உமாவுக்கு அப்துல் காதர் கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் பயந்துபோன உமா, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அப்துல் காதரின் பிடியில் இருந்து தப்பினார். பின்னர் தனது உறவினர் உதவியுடன் சித்ரதுர்கா மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுபற்றி சித்ரதுர்கா மகளிர் போலீசில் உமா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் காதரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் சித்ரதுர்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்